Published : 14 Nov 2021 08:19 PM
Last Updated : 14 Nov 2021 08:19 PM

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவை தடுத்து நிறுத்த தொடர் நடவடிக்கைகள் தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவை தடுத்து நிறுத்த தொடர் நடவடிக்கைகள் தேவை என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

கோவையில் மாணவி ஒருவர் சின்மயா வித்யாலாயா பள்ளியில் கடந்த ஆறுமாதம் முன்பு வரை படித்து வந்துள்ளார். அங்கிருந்த ஆசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லை குறித்து பள்ளி முதல்வரிடம் சொன்ன பிறகும் மாணவியை சமாதானப்படுத்தியதைத் தவிர சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கையோ, குற்றவியல் நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் தான் வேறு பள்ளிக்கு மாற்றலாகி சென்ற பிறகும் தொடர்ந்த பாலியல் தொல்லையால் 11.11.2021 அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னையில் இரண்டு தனியார் பள்ளிகளில் இதுபோன்ற குற்றச் செயல்கள் நடந்ததையொட்டி அரசு நிர்வாகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் தீவிரமான விவாதங்கள் நடந்த பின்னணியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் இந்த குற்றச் செயல்கள் நடந்த பிறகு அரசும், பொதுமக்களும் நடவடிக்கை எடுப்பதும், கோபப்படுவதும் சட்டங்கள் மற்றும் பள்ளி நடைமுறைகள் குறித்து விவாதிப்பதும், அதன் பிறகு அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் இல்லாமல் போவதும் வாடிக்கையாகி வருகிறது.

குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய நபர்கள் இக்கொடுஞ்செயலில் ஈடுபடுவது தொடரும்போது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எண்ணற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மாணவியின் இந்த தற்கொலைக்கு பின்னராவது, தமிழக அரசும், காவல்துறையும், பள்ளி, கல்லூரி நிர்வாகங்களில் எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் நடக்காமல், குற்றத் தடுப்பு நிர்வாக ஏற்பாடுகளை உத்தரவாதப்படுத்தவும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. சில ஆசிரியர்கள்/பள்ளி நிர்வாகியின் மிருகத்தனமான நடவடிக்கைகளால் மாணவிகள் பாதிக்கப்படுவதும், மரணிப்பதும் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

இக்கொடுஞ்செயலுக்கு சிபிஐ(எம்) சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன், சம்மந்தபட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வகையில் காலதாமதமின்றி வழக்கினை நடத்தி முடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

1. அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் பாலியல் குற்ற நடவடிக்கைகள் தடுப்பு கமிட்டிகள் (விசாகா) அமைக்கப்பட வேண்டும்.

2. அதைப்பற்றி பள்ளி / கல்லூரிகளிலும் பரவலாகவும் விளம்பரம் செய்யப்பட வேண்டும்.

3. இந்த கமிட்டி பள்ளி அலுவலர்கள் தவிர்த்து பள்ளிக்கு வெளியே உள்ள குழந்தைகள், பெண்கள், உரிமைகளில் கவனம் செலுத்துவோர் இணைக்கப்பட வேண்டும்.

4. இந்த கமிட்டியின் உறுப்பினர்கள் மாணவர்கள் எளிதில் அணுகக் கூடியவர்களாகவும், பரிவோடு அணுகுபவர்களாகவும் இருப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

5. இத்தகைய துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவ / மாணவியர் தங்களையே குற்றமிழைத்தவர்கள் போல கருதிக்கொள்ளும் மனநிலையை மாற்றுவதற்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இது பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய பிரிவினருக்கு இந்த விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும்.

6. ஆண்டுக்கு மூன்று முறையாவாது பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் கூட்டுக் கூட்டங்களை நடத்தி விசாகா கமிட்டி, அதன் உறுப்பினர்கள் ஆகியவற்றைப் பற்றி விளக்குவதோடு குழந்தைகள் இத்தகைய வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டால் ஆசிரியர்களிடமும், கமிட்டியிடமும், குடும்பத்தினரிடமும் சொல்ல வேண்டுமென்பதையும் அப்படிச் சொல்லும் போது சம்பந்தப்பட்டவர்கள் இதை பரிவோடு அணுக வேண்டும் என்பதையும் விளக்க வேண்டும்.

7. ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோருக்கும் சிறப்பு பயிற்சிகள் அளிப்பதன் மூலம் இத்தகைய பிரச்சனைகளில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்கிற உணர்வை உருவாக்க வேண்டும்.

8. மாவட்ட ஆட்சித் தலைவர், குழந்தைகள் நல அலுவலர் உள்ளிட்ட சிலரின் நேரடி அலைபேசி எண்களை பள்ளி, கல்லூரிகளில் எழுதி வைத்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி / கல்லூரி, மாணவ - மாணவிகளிடம் ரகசிய சர்வே எடுக்கப்பட்டு அதனடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மற்றும் நிலையான நடவடிக்கை விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x