

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் தளவானூர் ஊராட்சியில் உடைப்பு ஏற்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து தண்ணீர் முழுவதும் வெளியேறாமலிருக்க தற்காலிக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், சேதமடைந்த தடுப்பணை இன்று மாலை வெடி மருந்து பயன்படுத்தி தகர்க்க மேற்கொண்ட முயற்சி தோல்வியைடந்தது.
இதனால், அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து பொதுப்பணித் துறையினருடன் ஆட்சியர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பாக விழுப்புரம் அருகிலுள்ள தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எனதிரிமங்கலத்திற்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. தடுப்பணை கட்டிய ஒரு மாதத்திற்குள்ளாகவே பெய்த கனமழை காரணமாக தடுப்பணையில் ஒரு பகுதியான கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எனதிரிமங்கலம் பகுதியில் உள்ள கதவணைகள் ஒன்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் நீர் தேக்கி வைக்க முடியாமல் முழுவதுமாக அப்போது வெளியேற்றப்பட்டது.அதையடுத்து மண் சுவர் எழுப்பப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
மேலும், கடந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் தளவானூர் பகுதியைச் சேர்ந்த தடுப்பணையின் மற்றொரு பகுதி முற்றிலுமாக உடைந்து சேதமடைந்து முழுவதுமாக தண்ணீர் வெளியேறிவருவதால் ஆற்றின் கரையோரப்பகுதி சேதமடைந்து வருகிறது. எனவே. தடுப்பணையின் ஒரு பகுதியினை வெடிவைத்து தகர்த்து ஆற்றின் கரையோரப்பகுதி சேதமடையாமலும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வெள்ளநீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் மோகன் அறிவுருத்தியிருந்தார்.
இதையடுத்து இன்று நீர்வள ஆதார பொதுப்பணித்துறையினர், பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளை கையாள்வோரை கொண்டு, தென்பெண்ணயாற்றின் தெற்கு கரையோரப் பகுதியான எனதிரிமங்கலம் பகுதி வழியாக அணையின் சேதமடைந்த பகுதிகளுக்குச் சென்று 100 ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி அணையை வெடிக்கச் செய்தனர். ஆனாலும் சேதமடைந்த பகுதி எதிர்பார்த்த அளவுக்கு வெடித்து சிதறாததால், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆட்சியர் மோகன், பொதுப்பணித்துறையினரிடம் ஆலோசனை நடத்தினார்.