Published : 14 Nov 2021 07:13 PM
Last Updated : 14 Nov 2021 07:13 PM

கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

கன்னியாகுமரியில் அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளை (நவ.15 ஆம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் கடந்த 4 நாட்களாக கடும்மழை பெய்து வந்தநிலையில் மாவட்டத்தின் பழையாறு, பரளியாறு, கோதையாறு, வள்ளியாறு, குழித்துறை தாமிரபரணியாறு ஆகிய ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்துவருவதால் 150 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் அங்கு மேலும் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தெற்கு அந்தமான் பகுதியில் நேற்று ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. தற்போது மத்திய அந்தமானில் உள்ளது. அது தென்மேற்கு பகுதியில் நகர்ந்து 15 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும்.

அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற உருவாக வாய்ப்புள்ள நிலையில் நாளை மத்திய மேற்கு வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ.வேகத்தில் காற்று வீசும்.

இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் இரண்டு நாட்களுக்கு கன்னியாகுமரியில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு என்பதால் கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.

நாளை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். ஈரோடு திருப்பத்தூர் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோவை, தருமபுரி, சேலம், அரியலூர், பெரம்பலூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ளிட்ட மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் நீலகிரி, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x