Published : 14 Nov 2021 05:20 PM
Last Updated : 14 Nov 2021 05:20 PM

கன்னியாகுமரி வெள்ள பாதிப்புக்கு ஆக்கிரமிப்புகளே காரணம்; தமிழக அரசு நடவடிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்க ஆக்கிரமிப்பு தான் காரணம் என்பதால் அவற்றை அகற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

இந்தியாவின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரி கடுமையான மழை மற்றும் மழை பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மழையால் ஏற்படும் வழக்கமான பாதிப்புகளையும், உடனடி பாதிப்புகளையும் கடந்து, நீண்ட கால பாதிப்புகளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்போது பெய்து வரும் மழை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மழை கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்திற்கு புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மூன்று நாட்கள் பெய்த மழை எவ்வளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஊடகங்கள் மூலம் உலகமே அறிந்திருக்கிறது.

சென்னை மூன்று நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டால், கன்னியாகுமரி மாவட்டம் கடந்த மூன்று வாரங்களாக, ஒரு சில நாட்கள் தவிர, தொடர் மழையை அனுபவித்து வருகிறது. கடந்த 15 நாட்களில் பெய்த மழையை விட, நான்கு நாட்களாக பெய்து வரும் மழை பல மடங்கு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது; இன்னும் ஏற்படுத்தும். கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்று அதன் நில அமைப்பு தான். 24 மணி நேரத்தில் 200 மில்லிமீட்டர் மழை பெய்தாலும் கூட, அடுத்த சில மணி நேரங்களில் மழை நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி விடும். இப்போதும் கூட கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் மழை நாளை ஓய்ந்தால், நாளை மறுநாளுக்குள் வெள்ள நீர் வடிந்து விடும்.

ஆனால், இப்போது பெய்து வரும் மழை ஏற்படுத்தி உள்ள சேதங்களின் விளைவு அடுத்த பல மாதங்களுக்கு மக்களின் வாழ்வில் பாதிப்பை உருவாக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழையால் சாலைகளும், இருப்புப் பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமின்றி, நெல்லை மாவட்டத்திலும் சேர்ந்து கால்வாய்கள், குளங்கள், ஏரிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது.

6 ஆறுகளின் கரைகள் உடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மழை, வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளில் வாழ்ந்தவர்கள் தங்குவதற்கு வேறு இடம் இல்லாததால் இடிந்த வீடுகளிலும், அவற்றுக்கு அருகில் உள்ள திறந்த வெளிகளிலும் தங்கியிருப்பதும், ஒவ்வொரு வேளையும் உணவுக்காக நிவாரணக் குழுவினரின் வருகையை எதிர்பார்த்து பசியுடன் காத்திருப்பதும் மிகவும் வேதனையளிக்கின்றன. தொடர் மழையால் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அங்குள்ள மக்கள் உணவு, குடிநீர் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இத்தகையதொரு அவல நிலையை கன்னியாகுமரி மாவட்டம் அண்மைக்காலத்தில் சந்தித்ததில்லை. மற்றொருபுறம் தொடர் மழையால் உடைந்த நீர்நிலைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நீர் முழுவதும் வீணாக கடலில் கலந்து விட்டது. அதனால், அந்த நீர்நிலைகளை நம்பியுள்ள பாசனப்பரப்புகளில் அடுத்த சில மாதங்களுக்கு விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது. இது உழவர்களுக்கு கணக்கிட முடியாத இழப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் பேரழிவை சந்திக்கவில்லை என்றாலும் கூட, தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்டமும், அதன் மக்களும் பேரிடரை சந்தித்து வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் இப்போது எதிர்கொண்டு வரும் பேரிடருக்குக் காரணம் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் தான். கடந்த பல ஆண்டுகளாகவே வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை ஆகிய இரு பருவமழைகளாலும் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இதைக் கருத்தில் கொண்டு தான் அந்த மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன் கோடைக் காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் ஒப்பீட்டளவில் சிறப்பாகவே செய்யப்பட்டன. ஆனால், நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்தும் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாதது தான் அம்மாவட்டத்தின் துயரத்திற்கு காரணம். கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். சேதமடைந்த சாலைகள், பாலங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை சீரமைப்பதற்காக போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்துவதற்கு சிறப்புத் திட்டம் ஒன்றை தமிழக அரசு வகுத்து செயல்படுத்த வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கு ஆக்கிரமிப்பு தான் முக்கியக் காரணம் என்பதால் அவற்றை உடனடியாக அகற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x