

புதுக்கோட்டையில் நேற்று இரவு நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்ட மேடையில் மழையில் நனைந்தபடி பேசிய தொண்டருக்கு, அக்கட்சியின் எம்எல்ஏ குடை பிடித்தது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர மாநாடு போஸ்நகரில் உள்ள மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர், பி.யு.சின்னப்பா பூங்காவில் இரவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முன்னாள் நகரச் செயலாளர் அடைக்கலசாமி தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை பேசினார்.
இவருக்குப் பிறகு, கட்சி உறுப்பினர் ஜெகன் நன்றி தெரிவித்து பேசினார்.
இவர் பேசத் தொடங்கியதும் மழையும் பெய்யத் தொடங்கியது. மழையில் நனைந்தபடி பேசிய அவர், பேசி முடிக்கும் வரை மேடையில் இருந்த எம்எல்ஏ சின்னதுரை குடை பிடித்தார்.
கட்சித் தொண்டருக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எம்எல்ஏ குடை பிடித்தது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.