

சென்னையில் 1,300 இயந்திரங்கள் கொண்டு 3,400 மாநகராட்சியின் களப்பணியாளர்கள் மூலமாக கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மழைக்கால நோய்த்தடுப்பு பணிக்கான கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் வாகனத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னையில் மழைப்பொழிவுக்கு பின்னர் ஏற்படுகின்ற பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க மாநகராட்சியின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மழைக்கால நோய்த்தடுப்பு பணிக்கான கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் வாகனம்: மா. சுப்பிரமணியன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''மழைக்கால நோய்த்தடுப்பு பணிக்கான கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் வாகனத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (14.11.2021) தொடங்கி வைத்தார்.
மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-138, எம்.ஜி.ஆர். நகர், சென்னை மேல்நிலைப்பள்ளியில் மழைக்கால நோய்த்தடுப்பு பணிக்கான கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் வாகனத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (14.11.2021) கொடியசைத்து தொடங்கி வைத்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழக முதல்வரின் ஆலோசனையின்படி, சென்னையில் மழைப்பொழிவுக்கு பின்னர் ஏற்படுகின்ற பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க மாநகராட்சியின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 287 கையினால் இயக்கும் புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள், 12 சிறிய கையினால் இயக்கும் புகைமருந்து இயந்திரங்கள், 167 கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பான்கள், 256 கம்ப்ரஷர் மருந்து தெளிப்பான்கள், 479 பேட்டரியால் இயங்கும் மருந்து தெளிப்பான்கள், 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகை மருந்து இயந்திரங்கள், என மொத்தம் 1,300 எண்ணிக்கையிலான கொசு ஒழிப்பு இயந்திரங்கள் கொண்டு 3,400 மாநகராட்சியின் களப்பணியாளர்கள் மூலமாக கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தக் களப்பணியாளர்கள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்து, அபேட் மருந்து, புகை மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளித்தல் போன்ற சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கூடுதலாக அண்டை மாவட்டங்களிலிருந்து 500 தூய்மைப் பணியாளர்கள்:
சென்னை மாநகரில் கடந்த 4 நாட்கள் இடைவிடாது பெய்த கனமழையினால் தோட்டக் குப்பைகள் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ளது. இந்தக் குப்பைகள் தீவிர தூய்மைப் பணி திட்டத்தின் மூலம் மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை தவிர்த்து, அண்டை மாவட்டங்களிலிருந்தும் கூடுதலாக 500 தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு இந்தத் தீவிர தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு கூடுதலான குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது பெய்த கனமழையின் காரணமாக குப்பையின் அளவு அதிகளவு காணப்படுகிறது. இந்தக் குப்பைகளை அகற்ற மாநகராட்சியில் சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., துணை ஆணையாளர்கள் டாக்டர் எஸ். மனிஷ், இ.ஆ.ப., (சுகாதாரம்), விஷு மஹாஜன், இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி), மாநகர நல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.