கன்னியாகுமரியில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2000 பேர் மீட்பு: தமிழக டிஜிபி நேரில் ஆய்வு

கன்னியாகுமரியில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2000 பேர் மீட்பு: தமிழக டிஜிபி நேரில் ஆய்வு
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் தீயணைப்புப் படையினருடன் காவல்துறையும் இணைந்து செயல்படுவதால் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்கிறார்.

அரக்கோணத்தில் இருந்து 200 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று பிற்பகலுக்குள் கன்னியாகுமரி வந்து மீட்புப் பணிகளில் இணைந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.

அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம்:

கன்னியாகுமாரி மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரு அணைகளுக்கும் விநாடிக்கு 18,000 முதல் 20,000 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குளித்துறை தாமிரபரணி ஆறு, திற்பரப்பு அருவிகளில் நீர் திறந்துவிடப் படுவதால் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊத்துவால்மடம், தோவாளை, சென்பகன்ராமன் புதூர், கிள்ளியூர், எஸ்டி மாங்காடு பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளன.

இதனால், அப்பகுதிகளில் இருந்து மக்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சேரமங்கலம் பகுதியில் மின் கோபுரத்தின் மீது தென்னை மரம் விழுந்ததில் பல இடங்களில் மின் விநியோகம் தடை பட்டுள்ளது.

மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிகள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், ஐ.பெரியசாமி, மனோ தங்கராஜ் ஆகியோர் முகாமிட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் 4 நாட்களாகப் பெய்துவரும் மழைநீரால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன. இந்நிலையில் அங்கு இன்றும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 50 கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in