தற்கொலை எண்ணத்திலிருந்து 30 ஆண்டுகளில் 3 லட்சம் பேரை மீட்ட ‘சிநேகா தொண்டு நிறுவனம்

தற்கொலை எண்ணத்திலிருந்து  30  ஆண்டுகளில் 3 லட்சம் பேரை மீட்ட ‘சிநேகா தொண்டு நிறுவனம்
Updated on
2 min read

தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தற்கொலை எண்ணம் கொண்ட பலரை அதிலி ருந்து மீட்டு சராசரி மனிதர்களாக்கும் சேவையில் சென்னையில் கடந்த 30 ஆண்டுகளாக சிநேகா தற்கொலை தடுப்பு மையம் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் தற்கொலை எண்ணம் கொண்ட சுமார் 3 லட்சம் பேரை அதிலிருந்து வெளிக்கொணர்ந் துள்ள இந்த நிறுவனத்தை மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார் கடந்த 1986-ல் தொடங்கினார்.

நிறுவனம் உருவானது எப்படி?

மன நல மருத்துவத்தில் பிஎச்டி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பதற்காக 1980-களில் இங்கிலாந்து சென்றார் லட்சுமி. இந்தியாவில் நிகழும் விதவித மான தற்கொலைகள், அதற்கான காரணங்கள் குறித்து அந்த ஆய்வுக் கட்டுரையில் விவரமாக தெரிவித் திருந்தார். இங்கிலாந்தில் 50 ஆண்டு களுக்கும் மேலாக ஸமரிட்டான்ஸ் என்கிற தன்னார்வ நிறுவனம் தற் கொலை எண்ணம் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதை அறிந்தார். அதேபோல் ஒரு அமைப் பை தமிழகத்தில் தொடங்கினால் என்ன? என சிந்தித்தார். தீவிர சிந்தனைக்குப் பின்னர் களமிறங் கினார்.

சென்னை ராயப்பேட்டையில் வாடகை கட்டிடத்தில் சிநேகா தற்கொலை தடுப்பு மையம் எனும் பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை 1986-ல் தொடங்கினார். தேர்ந்த மனநல ஆலோசகர்களைக் கொண்டு, தற்கொலை எண்ணம் கொண்ட பல்லாயிரக்கணக்கான நபர்களை அதிலிருந்து வெளிக்கொணர்ந்தார். கடந்த 10 ஆண்டுகளாக ராஜா அண்ணாமலைபுரத்தில் சொந்த கட்டிடத்தில் சிநேகா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

நேரில் வர இயலாத தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தொலை பேசி ஆலோசனை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 044-24640050 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொண்டு கடந்த 30 ஆண்டுகளில் 3 லட்சம் பேர் தற்கொலை பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளனர்.

“முதலில் மன அழுத்தம் என்ற நிலை வரும்போது, மனம் விட்டுப் பேச வேண்டும். விஷயங்களை பகிர்ந்துகொள்ள நம்பிக்கையுள்ள ஒருவர் இல்லாதபட்சத்தில் மன அழுத்தத்துக்கு ஆளானவர்கள் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். சிநேகா மையம், தற்கொலை எண்ணம் கொண்டவர்களின் நம்பிக்கைக்கு உரிய தோழனாய் திகழ்கிறது. ஒருவர் கூறும் எந்த விவரத்தையும் வெளியே யாருக்கும் தெரிவிக்காமல் ஆற்றுப்படுத்தி தற்கொலை எண்ணத்திலிருந்து வெளிகொண்டு வருகிறோம்” என்கிறார் டாக்டர் லட்சுமி.

சிநேகா தற்கொலை தடுப்பு மையம் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் தற்கொலை நிகழும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கே களப் பணியாற்றி வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயில் பகுதியில் ஆண்டு தோறும் குறைந்தபட்சம் 30 பேர் பூச்சிக் கொல்லி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்கின்றனர். பூச்சிக் கொல்லி மருந்துகள் மிக எளிதில் கிடைப்பதால்தான் அதை உட் கொண்டு தற்கொலை செய்துகொள் கின்றனர் என்கிற உண்மையை 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வின் மூலம் கண்டறிந்தனர்.

பின்னர் காட்டுமன்னார்கோயிலில் சிநேகா அமைப்பின் சார்பில் பூச்சிக் கொல்லி மருந்துகளை பத்திரப்ப டுத்தும் கிடங்கு ஒன்றை அமைத்தனர். விவசாயிகள் தேவைப்படும் சமயத் தில் மட்டும் இந்த கிடங்கிலிருந்து பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கிச் சென்று பயன்படுத்தும் நிலையை உருவாக்கினர். இதன் பிறகு கடந்த 3 ஆண்டுகளாக அந்த பகுதியில் ஆண்டுக்கு 5-க்கும் குறைவான தற் கொலை சம்பவங்கள் மட்டும் பதிவாகி யுள்ளன. விவசாயிகள் தற்கொலை அதிகம் நிகழும் பகுதிகளைக் கண்ட றிந்து இதுபோன்ற கிடங்குகளை அரசே அமைக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இதேபோல் தமிழகத்தில் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் அதிக எண்ணிக்கையில் தற்கொலைகள் நிகழ்வதை ஆய்வின் மூலம் அறிந்துகொண்டு அங்கே களமிறங்கியுள்ளனர். திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் ஆலோசனை மையம் அமைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in