Published : 14 Nov 2021 03:06 AM
Last Updated : 14 Nov 2021 03:06 AM

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் பெருநகர வெள்ள இடர் தணிப்பு, மேலாண்மைக்கான குழு: தமிழக அரசு ஆணை பிறப்பித்தது

சென்னை

சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவை, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றும்போது, ‘‘சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், வெள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல், நகர்ப்புற திட்டமிடல், பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்படும்’’ என்று அறிவித்தார்.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘`கடற்கரை நகரமான சென்னை, புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் அதிக அளவில் பாதிக்கப்படும் பகுதியாகவும், மிகுந்த ஈரம் மற்றும் வறட்சியான பருவநிலை கொண்ட பகுதியாகவும் உள்ளது. மேலும், சென்னையின் பெரும்பாலான பகுதிகள் கடல்மட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரமாகவும், சில பகுதிகள் கடல் மட்டத்தைவிட தாழ்வானதாகவும் உள்ளன. சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 2,500 ஏரிகள், குளங்கள் உள்ளன.

இங்கிருந்து வெளியேறும் நீர் முழுவதும் அடையாறு, கூவம், கோவளம், கொசஸ்தலை ஆறுகள்வழியாகச் செல்கிறது. இதனால்,மழைக்காலங்களில் தண்ணீரால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கின்றன. எனவே, ஆளுநர் அறிவித்தபடி குழுவை அமைக்க வேண்டும்’' என்று தெரிவித்திருந்தார்.

இதன் முதல்கட்டமாக கடந்த செப்.14-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில். மாநகராட்சி ஆணையர், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கொள்கை மற்றும்திட்டப் பிரிவு கூடுதல் செயலராக இருந்த, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், சென்னை மாநகரில் வெள்ளப் பாதிப்பு தடுப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் அனுப்பிய பரிந்துரையின் அடிப்படையில் `சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவை' தமிழக அரசு அமைத்துள்ளது.

இடம்பெற்றுள்ள அதிகாரிகள்

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையிலான இக்குழுவில், டெல்லி நகர் மற்றும் ஊரமைப்பு நிறுவன தலைமை திட்டஅலுவலர், காலநிலை பின்னடைவு பயிற்சி உலக வள நிறுவன இயக்குநர் நம்பி அப்பாதுரை, சென்னை வளர்ச்சி கல்வி நிறுவனப் பேராசிரியர் ஜானகிராமன், மும்பை ஐஐடிகட்டுமானப் பொறியியல் துறை பேராசிரியர் கபில் குப்தா, சென்னை அண்ணா பல்கலைக்கழக மனித குடியமர்வு மைய இயக்குநர் பிரதீப்மோசஸ், ஐதராபாத்தில் உள்ள தேசிய ரிமோட் சென்சிங் துறையின் பிரதிநிதி, அண்ணா பல்கலைக்கழக ரிமேட் சென்சிங் நிறுவனப் பேராசிரியர் திருமலைவாசன், ஐஐடி கட்டுமானப் பொறியியல் துறை தலைவர் பாலாஜி நரசிம்மன், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை திட்ட அதிகாரி, சென்னை மண்டல நீர்வளத் துறைதலைமைப் பொறியாளர், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை தலைமைப் பொறியாளர் இக்குழுவின் உறுப்பினர்-செயலராக இருப்பார். இந்த குழு, சென்னையில் வெள்ளப் பாதிப்பை குறைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும்.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலரின் சகோதரர்

குஜராத் மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான வெ.திருப்புகழ், தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்புவின் மூத்த சகோதரர். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோதும், அவர் பிரதமரானபோதும் திருப்புகழ் அவரின் கீழ் பணியாற்றினார். மேலும், பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இருந்தபோது, தமிழகத்தில் புயல் பாதிப்பு மற்றும் வறட்சிப் பாதிப்புகளை பார்வையிடும் குழுவின் தலைவராக தமிழகத்துக்கு வந்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x