ரயில்வே வாரியத்தின் உத்தரவை தொடர்ந்து அனைத்து விரைவு ரயில்களிலும் பழைய கட்டணம் அமல்: மீண்டும் கட்டணச் சலுகைகள் கிடைக்கும்

ரயில்வே வாரியத்தின் உத்தரவை தொடர்ந்து அனைத்து விரைவு ரயில்களிலும் பழைய கட்டணம் அமல்: மீண்டும் கட்டணச் சலுகைகள் கிடைக்கும்
Updated on
1 min read

ரயில்வே வாரிய உத்தரவைத் தொடர்ந்து தற்போது இயக்கப்படும் அனைத்து சிறப்பு விரைவுரயில்களிலும் நேற்று முதல் பழைய கட்டண முறை அமலானது.

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து வகையான போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன.

ரயில்வேயும் பயணிகளின் சேவையை முழுமையாக ரத்துசெய்தது. அதன் பிறகு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அமலானது. அதைத் தொடர்ந்து, அனைத்து வழித் தடங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இவற்றில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு, முன்பதிவு இல்லாதரயில்கள் இயக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், சிறப்பு ரயில் இயக்க நடைமுறையை ரத்து செய்து. பழைய கட்டண முறையில் விரைவு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு நேற்று உடனடியாக அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் 1,700 சிறப்பு ரயில்கள் மீண்டும் பழைய கட்டண முறையில் இயக்கப்பட்டன. இதற்கு பயணிகள், ரயில் பயணிகள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

தெற்கு ரயில்வேயில் 230 ரயில்

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மீண்டும் பழைய கட்டண முறையில் ரயில்களை இயக்க வேண்டும் என்ற ரயில்வே வாரியத்தின் உத்தரவை அமல்படுத்தியுள்ளோம். அதன்படி, தெற்கு ரயில்வேயில் 230 விரைவு ரயில்களும் இயக்கப்படும்.

அதுபோல, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுத் துறையில் பதக்கம் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணசலுகைகள் மீண்டும் வழங்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in