

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தவத்தாரேந்தல் கிராமத்தில் கிரைண்டரில் மாவு அரைக்கும்போது மின்சாரம் பாய்ந்து தந்தை, மகள், மருமகள், பேத்தி ஆகிய 4 பேரும் பலியாகினர்.
தவத்தாரேந்தல் கிராமத்தில் வசித்தவர் புயல்(55). விவசாயி. இவரது மனைவி முருகாயி. இவர்களுக்கு கருப்பையா, அழகு என இரு மகன்களும், மீனா (பிளஸ் 2 மாணவி) என்கிற மகளும் உள்ளனர். அழகு மனைவி லெட்சுமி(25). இவர்களுக்கு பிரியதர்ஷினி(1) என்ற குழந்தை உள்ளது.
இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். மருமகள் லெட்சுமி, கைக்குழந்தையுடன் கிரைண்டரில் நேற்று மாலை மாவு அரைத் துள்ளார். கிரைண்டரில் மின் கசிவு ஏற்பட்டதால், இருவரையும் சுண்டி இழுத்துள்ளது.
இதைப் பார்த்த மீனா இருவரையும் காப்பாற்றச் சென்றுள்ளார். அவரையும் மின்சாரம் தாக்கியது. இவர்களது அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த புயல் மூவரையும் காப்பாற்ற முயற்சித்துள்ளார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேரும் இறந்தனர்.
அப்போது, வயல்காட்டில் இருந்து வீட்டுக்கு வந்த முருகாயி 4 பேரும் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மின் இணைப்பை துண்டித்தனர்.
இது குறித்து திருப்புவனம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.