

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அமைச்சர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 9 நாட்களாக பெய்த தொடர் மழையால் சுமார் 20 ஆயிரம் ஏக்கர்விளைநிலங்கள் மழை தண்ணீரில் மூழ்கின. தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் மழை இல்லாததால் விளைநிலங்களில் இருந்து மழை நீர் வடிந்து வருகிறது.
இந்நிலையில் குறிஞ்சிப்பாடியில் நேற்று வெள்ள சேத பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் அரங்கமங்கலம் ஊராட்சியில் மாருதி நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து குறிஞ்சிப்பாடி- புவனகிரி சாலையில் அடூர் அகரம் பகுதியில் வெள்ள நீரில் மூழ்கிய விளை நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் வெள்ள சேதம் குறித்து கேட்டறிந்தார். அரங்கமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மாருதி நகரில் 18 ஆதி திராவிட குடும்பங்களுக்கு பட்டா உட்பட பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து வேளாண் துறை, பொதுப்பணித் துறை சார்பில் மழை வெள்ள பாதிப்பு குறித்த வைக்கப்பட்டிருந்த படக் கண்காட்சியையும், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட பயிர்களையும் பார்வையிட்டார்.
இதேபோன்று, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் புத்தூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், தரங்கம்பாடி வட்டம் கேசவன்பாளையம் சுனாமி நிரந்தர குடியிருப்பு பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் ஆகியவற்றை முதல்வர் பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பிறகு, நாகை மாவட்டத்துக்கு சென்ற முதல்வர், கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி, வேதாரண்யம் அருகே அருந்தவப்புலம் ஆகிய இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ள விளைநிலங்களை பார்வையிட்டார். மழையால் வீடுகளை இழந்த 5 பேருக்கு பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் ஆணைகளையும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்களையும் வழங்கினார்.
இதேபோன்று, திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர் மற்றும் புழுதிக்குடி ஆகிய இடங்களில் மழைநீரால் சூழப்பட்டுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டார்.
முதல்வரின் ஆய்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்ஆர்கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி, சிவ.வீ.மெய்யநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வெ.கணேசன், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், எஸ்.ராமலிங்கம், செல்வராஜ், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜ யன், எம்எல்ஏக்கள், மாவட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.