சாயக்கழிவு நீர் பிரச்சினை: தேர்தல் களம் இறங்க ‘விவசாயிகள் விழிப்புணர்வு அமைப்பு’ திட்டம்

சாயக்கழிவு நீர் பிரச்சினை: தேர்தல் களம் இறங்க ‘விவசாயிகள் விழிப்புணர்வு அமைப்பு’ திட்டம்

Published on

நொய்யல் ஆற்றின் கழிவுகள் போய்ச்சேரும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்தோர், ‘விவசாயிகள் விழிப்புணர்வு அமைப்பு’ என்ற பெயரில் வரும் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களம் இறக்க உள்ளனர்.

‘திருப்பூர் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாக நஷ்டஈடு பெறவும், ரசாயன நீர் பாதிப்புள்ள நிலங்களை மீட்டுருவாக்கம் செய்யவும், விவசாயியே வேட்பாளராக வேண்டும்’ என்று இப் பகுதியில் பிரச்சார நோட்டீஸ் விநியோகிக்கப்படுகிறது.

சாயக் கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவே நொய்யல் வேட்பாளரை நிறுத்தப் போகிறோம் என்கிறார் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் நொய்யல் பாசன விவசாயிகள் சங்க தலைவர் நொய்யல் மா.ராமசாமி. ‘தி இந்து’ செய்தியாளரிடம் அவர் கூறியதாவது.

நொய்யல் காவிரியில் சேரும் இடத்துக்கு முன்பு 20 கிமீ தொலைவில் உள்ளது சின்னமுத்தூர் தடுப்பணை. இங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் ஆத்துப்பாளையம் தடுப்பணையை 1993-ம் ஆண்டில் கட்டி வாய்க்கால் மூலம் பாசன வசதிக்காக தண்ணீர் விட்டனர். அங்கிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள பஞ்சமாதேவி வரை சாய, சலவை தண்ணீரே வாய்க்காலில் பாய்ந்தது. அதனால் அஞ்சூர், கார்வழி, துக்காச்சி, தென்னிலை கீழ், தென்னிலை மேல், முன்னூர், குப்பம், அத்திபாளையம், புன்னம், வேட்டைமங்கலம், புஞ்சை புகழூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, கடமாங்குறிச்சி, மண்மங்கலம், குப்பிச்சிபாளையம், காதப்பாறை, பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி என 18 ஊராட்சிகள் பாதிப்படைந்தன. இவை அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியின் கீழ் வருவது. இங்கே மட்டும் 20 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பாதிப்புக்குள்ளானது.

இதற்காக சுமார் ரூ.1000 கோடிக்கு மேல் நஷ்டஈடு தர தீர்ப்பாயம் உத்தரவிட்டு காலங்கள் உருண்டோடிவிட்டன. இன்னமும் பணம் வந்து சேரவில்லை, நிலமும் சீர்படுத்தப்படவில்லை.

எங்கள் சங்கத்தில் 1500 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதைப் போன்று பல விவசாயிகள் நல சங்கங்கள் உள்ளன. மொத்தம் 5 ஆயிரம் விவசாயக் குடும்பங்களில் 20 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அனைவருமே திருப்பூர் சாயக்கழிவுநீரால் பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கோரியுள்ள விவசாயிகள். விவசாய சார்பு குடும்பங்கள் என 10 ஆயிரம் பேர் உள்ளனர். நொய்யல் காவிரியில் சேரும் இடத்தில்தான் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நீர் எடுக்கப்படுகிறது. அதை பயன்படுத்தும் 1 லட்சம் பேரில் பெரும்பான்மையோருக்கு தோல் நோய் உள்ளிட்ட பல உபாதைகள் உள்ளன. எம்எல்ஏக்கள் இது குறித்து சட்டப்பேரவையில் பேசுவதில்லை, மக்களின் துயரை துடைப்பதில்லை.

கடந்த தேர்தலில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு செய்தோம். அது கவனிக்கப்படவில்லை. அதனால்தான் இம்முறை எங்களில் ஒருவரை வேட்பாளராக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in