

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் 4 தமிழ் எழுத்தாளர்கள், பிற இந்திய மொழிகளில் ஒரு எழுத்தாளர், ஆங்கில மொழி எழுத்தாளர் ஒருவர் என 6 பேருக்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயரிலான பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த விருதுடன் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.
2020, 2021-ம் ஆண்டுகளுக்கான விருதுவழங்கும் விழா சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. 2020-ம் ஆண்டுக்கான விருதுகள் ந.முருகேசபாண்டியன் (உரைநடை), அ.மங்கை (நாடகம்), அறிவுமதி (கவிதை), பொன்னீலன் (நாவல்), ஆர்.பாலகிருஷ்ணன் (ஆங்கிலம்), சித்தலிங்கையா (கன்னடம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டன. 2021-ம் ஆண்டுக்கான விருதுகள் அபி (கவிதை), ராசேந்திரசோழன்(புனைவிலக்கியம்), எஸ்.ராமகிருஷ்ணன்(உரைநடை), வெளி ரங்கராஜன் (நாடகம்), மருதநாயகம் (ஆங்கிலம்), நதித் சாகியா(காஷ்மீரி) ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கி சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
நூல் எழுதுவது எளிதான காரியமல்ல. நூலாசிரியர்களின் கற்பனைத் திறனை எண்ணும்போது பிரமிப்பாக இருக்கும்.
நான் சென்னை மேயராக இருந்தபோது அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளிலும் கட்டாயம் தமிழ் இடம்பெற வேண்டும் என்பதை அமல்படுத்தினேன். தற்போது அந்த நடைமுறை சற்று குறைந்துவிட்டது. விரைவில் பெயர்ப் பலகைகளை தமிழில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், இலக்கியத் துறைக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தமிழகத்தில் புத்தகப் பூங்கா உட்படபதிப்பாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை முதல்வர் விரைவில் நிறைவேற்றுவார். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், செயலாளர் எஸ்.கே.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.