

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், மழை பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே சென்று சிகிச்சை வழங்க 66நடமாடும் மருத்துவ முகாம்கள்நேற்று முதல் தொடங்கப்பட்டுஉள்ளன.
வடகிழக்கு பருவமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்த கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்த சூழலில் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவாதவகையில் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக சம்பந்தப்பட்ட இடங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளாக பிளீச்சிங் பவுடர் அடிப்பது, கழிவுநீரை வெளியேற்றுவது, குப்பைகளை அகற்றுவது, சாலைகள் முழுவதும் குளோரின் பவுடர் தெளிப்பது, கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கு நடமாடும் மருத்துவ முகாம்கள் நேற்று தொடங்கப்பட்டன. இந்த முகாம்களை காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பாக்கத்திலும் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பெரும்பாக்கத்தில் குடிசை மாற்று வாரியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 20,678 நபர்களுக்கு 10 கிலோ அரிசி, 1கிலோபருப்பு, 1 லிட்டர் பாமாயில் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வாழ்விடம் மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், இணை இயக்குநர் சிவ. கிருஷ்ணமூர்த்தி, வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்ப்பாட்டு துறைஇயக்குநர் வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சியர்கள் காஞ்சிபுரம் மா.ஆர்த்தி, செங்கை ஆ.ர, ராகுல் நாத், திட்ட இயக்குநர் செல்வகுமார், தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடை நம்பி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரும்புதூர் கு. செல்வப்பெருந்தகை, சோழிங்கநல்லூர் எஸ்.அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 நடமாடும் மருத்துவ முகாம்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 45 நடமாடும் மருத்துவ முகாம்களும் அந்தந்த பகுதிகளுக்குச் சென்று மருத்துவம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த குழுமூலம் தினமும் 156 இடங்களில்முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதே போல் 2 மாவட்டங்களிலும் கடந்த மூன்று நாட்களாக 414 முகாம்கள் நடைபெற்று உள்ளன. இதில் 11,481 நபர்கள் பயன் பெற்றுள்ளார்கள். 806 இடங்களில் தண்ணீரில் குளோரின் கலந்து பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.