

சிவகங்கை அருகே கிராமப் பகுதியில் அதிகாரிகள் உறுதி யளித்தபடி தொடக்கப் பள்ளியைத் தொடங்கவில்லை. இந்நிலையில் வெளியூர் பள்ளிக்குச் சென்று வருவதற்கான வேன் கட்டணமும் உயர்த்தப்பட்டதால், 20 குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் நிறுத்தி வைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கவுரிப் பட்டியில் அருகருகே உள்ள திரு வேலங்குடி, காரம்பட்டி கிராமங்களில் 400 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 50 குழந்தைகள் இருந்தும் பள்ளி இல்லை. அரசு விதிமுறைப்படி 25 மாணவர்கள் இருந்தாலே தொடக்கப்பள்ளி தொடங்கலாம். ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டினர்.
இதனால் அவர்கள் 5 கி.மீ. தூரத்தில் உள்ள காளையார்மங்கலம், 8 கி.மீ. தூரத்தில் உள்ள ஒக்கூர், 4 கி.மீ. தூரத்தில் உள்ள நாட்டரசன்கோட்டை பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓராண்டுக்கு முன்பு பள்ளி தொடங்க வலியுறுத்தி கிராம மக்கள் ஊரை விட்டு வெளி யேறி போராட்டம் நடத்தியதை அடுத்து அப்போதைய ஆட்சியர் ஜெயகாந்தன் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுத்தார். அப்போது, கிராமத்தில் அரசு நிலம் இல்லாததால் பள்ளிக் கட்டிடம் கட்ட தனியாரிடம் 60 சென்ட் நிலம் தானமாகப் பெறப் பட்டது. இருந்தபோதிலும், எம்எல்ஏ சிபாரிசு கடிதம் இல்லையெனக் கூறி பள்ளி தொடங்கவில்லை. இதுகுறித்து கடந்த ஜூலையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் கல்வித்துறை அதிகாரிகளிடம் பரிந்துரை கடிதம் அளித்தார். அதன் பின் நிரந்தரப் பள்ளிக் கட்டிடம் அமைவதற்கு முன்னதாக அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் பள்ளி தொடங்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பள்ளி தொடங்கவில்லை.
இந்நிலையில் பேருந்து வசதி இன்றி காளையார்மங்கலம் பள்ளிக்கு மாணவர்களை பெற்றோர் அனுப்ப வில்லை. இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணனிடம் கேட்டபோது, ‘உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.