Published : 14 Nov 2021 03:08 AM
Last Updated : 14 Nov 2021 03:08 AM

ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கிய நிக்கல்சன் கால்வாய்; மழை காலங்களில் உறக்கத்தை இழக்கும் கன்சால்பேட்டை மக்கள்: மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண கோரிக்கை

வேலூர் கன்சால்பேட்டை குடி யிருப்புகளில் புகும் மழைநீர் பிரச்சினைக்கு நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பே காரணம் என கூறும் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத் துள்ளனர்.

வேலூர் மாநகராட்சியில் ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் கன்சால்பேட்டை, முள்ளிப்பளையம் திடீர் நகர் பகுதி குடியிருப்புகளில் மழைநீர் சூழ்வதும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது.

இந்தாண்டும் வழக்கம்போல் மழைக்கால முகாம்கள் கன்சால்பேட்டை, திடீர் நகர் பகுதி மக்களுக்காக ஏற்படுத்தி தங்க வைத்து உணவு வழங்கி வருகின்றனர். ஆனால், ஏன்? கன்சால்பேட்டை, திடீர் நகர் பகுதியில் மட்டும் மழைநீர் சூழ்கிறது, அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து யாரும் அக்கறை கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நிக்கல்சன் கால்வாய்

வேலூர் நகரின் பிரதான நீர் கால்வாய் என கருதப்படும் நிக்கல்சன் கால்வாய் ஓட்டேரியில் தொடங்கி சுமார் 20 கி.மீ பயணித்து பாலாற்றில் கலக்கிறது. பருவமழைக் காலங்களில் வழக்கத்தைவிட கழிவுநீருடன் நான்கு மடங்கு மழைநீரை கால்வாய் வெளியேற்ற வேண்டிய உள்ளது. ஆனால், ஆக்கிரமிப்பால் கால்வாய் சுருங்கியதே திடீர் நகர், கன்சால்பேட்டை மக்களின் பாதிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

கொணவட்டம் பகுதியில் இருந்து வரும் அதிகப்படியான மழைநீர் நிக்கல்சன் கால்வாயுடன் கலப்பதால் திடீர் நகரை வெள்ளம் சூழ்ந்துகொள்கிறது. கன்சால்பேட்டை பகுதியில் நிக்கல்சன் கால்வாய் 10 அடியாக சுருங்குவதால் மழைநீர் முழுவதும் வீடுகளில் புகுந்துவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கன்சால்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரகுநாதன் கூறும்போது, ‘‘ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழை, கழிவுநீருடன் கலந்து எங்கள் வீடுகளில் புகுந்துவிடுவதால் நிவாரண முகாம்களில் குடும்பத்துடன் தங்க வேண்டியுள்ளது. அவர்கள் கொடுக்கும் சாப்பாட்டைத்தான் சாப்பிட வேண்டி இருக்கும். எங்களுக்கு வீட்டுக்கு வந்தால்தான் நல்ல சாப்பாடு கிடைக்கும்.

வேலூர் நகரின் பெரும்பகுதி மழைநீரும் கழிவுநீரும் நிக்கல்சன் கால்வாயில் வருகிறது. கன்சால்பேட்டை வழியாகச் செல்லும் இடத்தில் மட்டும் ஆக்கிரமிப்பால் கால்வாய் சுருங்கிவிடுகிறது. ரியல் எஸ்டேட் வளாகம் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தினரின் ஆக்கிரமிப்பால் கால்வாய் சுருங்கிவிட்டது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அப்போதுதான் எங்கள் பகுதி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்’’ என்றார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிக்கல்சன் கால்வாய் இருபுறமும் தடுப்புச்சுவர் கட்ட ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2019-ல் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், இதுவரை முழுமை பெறாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி திடீர் நகர், கன்சால்பேட்டை மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

இதுகுறித்து, வேலூர் மாநக ராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘திடீர் நகர் பகுதியில் கால்வாய் புறம்போக்கு இடம் பிரச்சினை உள்ளது. தனிநபர் ஒருவர் உரிமை கொண்டாடுவதால் அதுகுறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. கன்சால்பேட்டை பகுதி மக்களின் கோரிக்கை நியாயமானது. அவர்கள் கூறுவதுபோல் கால்வாய் இடத்தை அளவீடு செய்தால் உண்மை என்னவென்று தெரிந்துவிடும். தனியார் ரியல் எஸ்டேட் வளாகத்துக்கும் செல்லும் தரைப்பாலத்தின் உயரத்தை அதிகரித்து கட்ட வேண்டும்.

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் கரைகள் அமைக்க ரயில்வே பகுதியில் அனுமதி கோரியுள்ளோம். அவர்கள் அனுமதி கொடுக்காததால் பணி நிலுவையில் உள்ளது. மாங்காய் மண்டி பாலத்தின் இரண்டு கண்கள் தூர்ந்து போயுள்ளன. அந்த பாலத்தை இடித்து புதிய பாலம் கட்ட வேண்டும்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x