Last Updated : 13 Nov, 2021 08:47 PM

 

Published : 13 Nov 2021 08:47 PM
Last Updated : 13 Nov 2021 08:47 PM

இரண்டரை ஆண்டுகளாக பரோலில் இருந்த ஆயுள் கைதியை சிறையில் அடைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

அருப்புக்கோட்டை பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டரை ஆண்டுகளாக பரோலில் இருந்த ஆயுள் கைதியை சிறையில் அடைக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் மகள் சுபலட்சுமி (11). தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வார். 1998 மார்ச் 4 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சுபலட்சுமி வீடு திரும்பவில்லை. மறுநாள் ஊருக்கு அருகே தோட்டத்தில் பிணமாக மிதந்தார்.

இதை விசாரித்த போலீஸார், அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பொறியாளர் வீரபாரதி, முருகன், உபயதுல்லாவை கைது செய்தனர்.

மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து 1999ல் விருதுநகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மூவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

இதில் அவர்களது தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுளாக மாற்றியது. பின், உபயதுல்லா இறந்து விட்டார். மற்ற இருவரும் மதுரை சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். பின்னர், பாளையங்கோட்டை சிறை, சென்னை புழல் சிறைக்கும் வீரபாரதி மாற்றப்பட்டார்.

இதனிடையே, வீரபாரதி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் தனது மனுவை நிராகரித்த அரசின் உத்தரவை எதிர்த்தும், தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். இந்த வழக்கில்தானே ஆஜராகி வாதிடுவதால் தனக்கு பரோல் வழங்க வேண்டுமெனவும் கூறியிருந்தார்.

இதன்பேரில், கடந்த 1.1.2019ல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வீரபாரதிக்கு பரோல் வழங்கியது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், வீரபாரதியின் பரோல் நீட்டிக்கப்பட்டது. சுமார் இரண்டரை ஆண்டுக்கு மேலாக பரோலில் இருந்தவாறே தனது வழக்கை நடத்தினார்,

இதனைத்தொடர்ந்து இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், வழக்கின் விசாரணையில் ஆஜராகி வாதிடுவதற்காகத்தான் வீரபாரதிக்கு பரோல் வழங்கப்பட்டது.

தற்போது வழக்கின் விசாரணை முடிந்து விட்டது. இதனால், மனுதாரருக்கு பரோல் வழங்கப்பட்டதன் நோக்கம் முடிந்துவிட்டது. எனவே, மனுதாரர் உடனடியாக சென்னை புழல் சிறை கண்காணிப்பாளர் முன் சரணடைய வேண்டும். தவறினால், சென்னை போலீஸ் கமிஷனர் தரப்பில் மனுதாரரை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து இன்று மாலை வீரபாரதி புழல் சிறையில் சரண் அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x