

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதியில் டிராக்டர் ஓட்டி சென்று மழை தண்ணீர் மூழ்கிய விளைநிலைங்களை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்
டிராக்டரில் ஏறிச் சென்று, பயிர் மூழ்கிய இடத்தில் இறங்கி நெற் பயிரை பார்வையிட்டு விவசாயிகளிடம் இது குறித்து கேட்டறிந்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் காரில் இருந்தபடியே வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு செல்கிறார் என்றும் என்எல்சி நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் கீழ் பரவனாறு தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி, பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பூவாலை, குறிஞ்சிப்பாடி பகுயில் பல்வேறு கிராமங்களில் மழை வெள்ளத்தினால் சேதமடைந்த விளைநிலங்களை இன்று மாலை (நவ.13) பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வாங்கினார்.
மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழை, வெள்ளத்தால் பரவனாற்றில் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் பூவாலை கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த கிராமத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். இந்த கிராமத்திற்கு காரில் வந்த அவர் அங்கிருந்து டிராக்டரில் ஏறி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள வயல் பகுதிக்கு சென்றார்.
பின்னர் வயலில் தண்ணீர் மூழ்கிய பகுதிகளில் இறங்கிய அண்ணாமலை, வயலில் மூழ்கிய நெற்பயிர்களை பார்வையிட்டு பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். மேலும் எதனால் பாதிப்பு ஏற்படுகிறது? பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பன போன்றவற்றையும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் மீண்டும் டிராக்டரில் செல்லும் போது சிறிது தூரம் டிராக்டரை அண்ணாமலையே ஓட்டிச் சென்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் பரவனாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இந்த கிராமத்தில் சுமார் 3000 ஏக்கர் விளை நிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி விட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் ஏற்கனவே மேல் பரவனாறு, நடு பரவனாறு தூர்வாரபட்டது. ஆனால் கீழ் பரவனாறு தூர்வாரப்படவில்லை. என்எல்சி நிறுவனத்திடம் பேசி சிஎஸ்ஆர் நிதி மூலம் கீழ் பரவனாற்றை தூர்வாரி இந்த நதியை அகலப்படுத்துவதற்கான முயற்சிகளை பாஜக மேற்கொள்ளும். இந்த பகுதி விவசாயிகள் அதிக அளவில் பயிர் கடன் வாங்கி இருக்கிறார்கள்.
அதை ரத்து செய்ய வேண்டும். கடந்த 2016 ம் ஆண்டிலேயே பயிர் கடன் வாங்கி இருக்கிறார்கள். அந்த கடன்களையும் சேர்த்து ரத்து செய்ய வேண்டும். பொதுவாக வெள்ள பாதிப்புகளை பார்ப்பவர்கள் சாலையோரத்தில் நின்று பார்வையிட்டு சென்று விடுகிறார்கள்.
ஆனால் நான் விவசாயிகள் பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடியாக அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு உள்ளேன். தமிழக முதல்வர் ஸ்டாலின் காரில் இருந்தபடியே வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு செல்கிறார்.
அப்படி பார்வையிட்டால் உண்மை நிலவரம் தெரியாது. அவர் அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று விவசாயிகளிடம் கலந்துரையாடி பார்வையிட வேண்டும். அவர் செய்வார் என நம்புகிறேன்.
விவசாயிகளின் குறைகளை தமிழக அரசு போக்கும் என நம்புகிறேன் எனக் கூறினார். கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அண்ணாமலை, தமிழக அரசு அவ்வாறு பேரிடர் மாவட்டமாக அறிவிக்க பரிந்துரை செய்தால் அதற்கான முயற்சிகளை நாங்கள் செய்வோம் என்றார்.
2020 -2021 ம் ஆண்டில் பேரிடர் நிதி மொத்தம் 1360 கோடி ரூபாய். இதில் மத்திய அரசு தனது பங்காக 1020 கோடியை கொடுத்துள்ளது. மாநில அரசு தனது 25 சதவீத பங்காக 300 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் மாநில அரசின் பங்கு இன்னும் போடப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் நிதியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றார். மாவட்ட தலைவர் கே.பி.டி. இளஞ்செழியன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.