

பாலியல் வன்செயல்கள் நடக்காமல் இருப்பதைப் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பயின்றுவந்த 17 வயது மாணவி கடந்த வியாழன் அன்று கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தனது வீட்டு மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அந்தக் கடிதத்தில், சில மாணவிகள், ஒரு ஆசிரியரைக் குறிப்பிட்டு அவர்களை சும்மா விடக்கூடாது என எழுதப்பட்டு இருந்தது.
தற்கொலை செய்த மாணவிக்கு, அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாகவும், அதனால் மனமுடைந்தே மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனவும் கூறப்படுகின்றது.
மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது போக்சோ, தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆசிரியரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மாணவியின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவி தற்கொலை செய்த விவகாரம் மாணவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.