Last Updated : 13 Nov, 2021 06:10 PM

 

Published : 13 Nov 2021 06:10 PM
Last Updated : 13 Nov 2021 06:10 PM

5 மாவட்டங்களில் நடைபெற்ற ரூ.400 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கு; பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை

மதுரை, சிவகங்கை உட்பட 5 மாவட்டங்களில் முதலீட்டாளர்களிடம் பணம் இரட்டிப்பு ஆசை காட்டி ரூ.400 கோடி வரை வசூலித்து மோசடி செய்த வழக்கின் விசாரணை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

காரைக்குடி களனிவாசலைச் சேர்ந்த டி.பானு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''என் கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். என் பக்கத்து வீட்டின் அருகே குடியிருந்த சோமசுந்தரம் மற்றும் புதுக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த செல்வி ஆகியோர் பெருந்துறையில் தர்மராஜ் என்பவர் நடத்தி வரும் கே.எம்.சாமி குரூப் ஆஃப் பிஆர்ஐ என்ற பெயரில் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 6 மாதத்தில் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும் என்றனர். முதலீட்டாளர்களைச் சேர்த்துவிட்டால் 10 சதவீத கமிஷன் தருவதாகவும் கூறினர்.

இதை நம்பி நான் சொந்தப் பணம் ரூ.18 லட்சம், 42 பேரிடம் வசூலித்த ரூ.1.68 கோடியைப் பல்வேறு தவணைகளில் தர்மராஜ், செல்வி ஆகியோரிடம் வழங்கினேன். தர்மராஜ் காரைக்குடிக்கு நேரில் வந்து என்னிடம் பணம் வாங்கிச் சென்றார். விரைவில் பத்து சதவீத கமிஷன் தருவதாகக் கூறினார். 6 மாத காலக்கெடு நெருங்கியதும் முதலீட்டுத் தொகையைத் திரும்பக் கேட்டபோது பல்வேறு சாக்குப்போக்கு சொல்லி தாமதப்படுத்தி வந்தார். தர்மராஜ், செல்வி ஆகியோரை நேரிலும், செல்போனிலும் தொடர்பு கொண்டபோதும் அவர்களிடமிருந்து பணத்தைப் பெற முடியவில்லை.

பின்னர் விசாரித்தபோது, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் என்னைப் போல் பலரிடம் சுமார் ரூ.400 கோடி வரை வசூலித்து ஏமாற்றியுள்ளார் தர்மராஜ். இதற்கு செல்வி உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக எனது புகாரின் பேரில் சிவகங்கை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தர்மராஜ் உள்ளிட்டோரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. இப்பணத்தைச் சொத்தாகவும், வங்கியில் பணமாகவும் வைத்துள்ளனர். இந்தச் சொத்துகளையும், வங்கியிலுள்ள பணத்தையும் முடக்க வேண்டியுள்ளது. இதனால் இந்த வழக்கை சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸிடம் இருந்து பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’’.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில், ''இந்த வழக்கில் 24 பேர் குற்றவாளிகளாக உள்ளனர். ரூ.68 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ''சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு ஆவணங்களை உடனடியாகப் பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு வழங்க வேண்டும்'' என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x