

கோவை ஆனைமலையில் நடை பெற்ற இரட்டைக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞருக்கு தூக்கு மற்றும் ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
ஆனைமலை அருகே உள்ள சுப்பேகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (எ) மாரிமுத்து (26) கடந்த 2005-ம் ஆண்டு ஆழியாறு பகுதியில் நடந்த கொலை வழக்கில் கோவை முதலாவது விரைவு நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண் டனை விதித்தது. இந்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் சாட்சி கூறினார்.
இந்நிலையில், தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத் தில் ராஜீவ்காந்தி மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டில், அவரது ஆயுள் தண்டனை 7 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது. கோவை மத்திய சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்துவிட்டு ராஜீவ்காந்தி, கடந்த 2012-ம் ஆண்டு விடுதலையானார்.
இதனிடையே, கொலை வழக் கில் தனக்கு எதிராக சாட்சி அளித்த முருகன் மீது முன்விரோதம் இருந்த தாகக் கூறப்படுகிறது. இந்நிலை யில், தனது வீட்டை விரிவுபடுத்தி புதிதாக கட்டுவதற்காக திட்டமிட்ட ராஜீவ்காந்தி, வீட்டுக்கு அருகில் உள்ள முருகனின் நிலத்தை விலைக்கு கேட்டுள்ளார். இதற்கு முருகன் மறுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ராஜீவ்காந்தி, முருகனின் குடும் பத்தை பழிவாங்க திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2012 பிப்ரவரி 11-ம் தேதி, வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த முருகனின் மனைவி பழனியம்மாள் (55), மகள்கள் ஜோதிமணி (31), மகுடீஸ்வரி(28) ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர், தனது சித்தப்பா ஜோதிமணி(55) என்பவரின் இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில், பழனியம்மாள், ஜோதிமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் மகுடீஸ்வரி உயிர் பிழைத்தார். இந்த வழக்கில் ராஜீவ்காந்தி, அவரது சித்தப்பா ஜோதிமணி ஆகியோரை ஆனைமலை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஜோதிமணி உயிரிழந்துவிட்டார். இந்நிலையில், வழக்கின் மீதான இறுதிகட்ட விசாரணை, நீதிபதி ஜி.விஜயா முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இதில், ராஜீவ்காந்தி மீதான குற்றங்கள் சந்தேகமின்றி நிரூபணம் ஆனாதாக தெரிவித்த நீதிபதி, கொலைக் குற்றத்துக்கு தூக்குத் தண்டனையும், கொலை முயற்சிக்கு ஆயுள் தண்டனையும், கொலை மிரட்டலுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.