Published : 13 Nov 2021 04:31 PM
Last Updated : 13 Nov 2021 04:31 PM

நீதிபதிகள் இடமாற்றத்துக்கு அவசியம் என்ன?-கி.வீரமணி கேள்வி

சென்னை

காரண காரியமின்றி நீதிபதிகளை மாற்றவேண்டிய அவசியம் என்ன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

"உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் - இடமாற்றம் சம்பந்தமான அதிகாரம் படைத்த ‘கொலிஜியம்’ என்பது மூத்த நீதிபதிகள் (4 அல்லது 5 நீதிபதிகளைக் கொண்டது) அமைப்பு சென்ற மாதத்தில் கூடி, ஏற்கெனவே பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாகப் பணியாற்றி வரும் 28 பேரை வேறு உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக மாற்றும்படி ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை வழங்கியுள்ளது.

அதன்படி, முதல் கட்டமாக 15 பேரையும், இரண்டாம் கட்டமாக 7 பேரையும் ஊர் மாற்றம் செய்ய குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கி, ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டு விட்டன. புகார்கள் வந்து குவிந்தால் ஒழிய, ஆராய்ந்து அதில் உண்மை உள்ளது என்பது உறுதியானால் தவிர, அவர்களை மாநிலம் விட்டு மாநிலம் மாற்றுவது, ஒருவேளை நியாயப்படுத்தப்படலாம். எந்தக் காரணமும் இன்றி, புகார்கள் எழாத நிலையில், திடீரென்று மாற்றம் அறிவிப்பது அவர்களது நேர்மையான பணியைச் செய்யவிடாமல் தடுப்பதாகவோ அல்லது நேர்மையான வகையில் வழக்குகளை அவர்கள் நடத்துவதைக் கண்டு முகம் சுளிப்பதாகவோதான் இருக்க முடியும் என்று மக்கள் - வழக்காடிகள் பரவலாகக் கருதிட வாய்ப்பு ஏற்படக்கூடும்.

சுதந்திரமான நீதிபதிகளை அச்சுறுத்த இது ஒரு வழிமுறையோ என்றும் உலகம் எண்ணுவதற்கு இடம் கொடுக்கவே செய்யும். 1976ஆம் ஆண்டு நெருக்கடி (எமர்ஜென்சி) அறிவிக்கப்பட்டபோது இப்படி நிகழ்ந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி ஜஸ்டீஸ் கே.சந்துரு ஒரு கட்டுரையில் (மூன்றாம் பக்கத்தில் காண்க) குறிப்பிட்டுள்ளபடி,

‘‘இந்த ஊர் மாற்றக் கொள்கையினால் ஒரு கட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்பே (முதல் ஏழு நீதிபதிகள் நிர்வாகக் குழுவாக இருப்பார்கள்) வெளிமாநில நீதிபதிகளிடம் சென்றது! மூன்றில் ஒரு பங்கு வெளிமாநில நீதிபதிகள் என்ற ஊர் மாற்றக் கொள்கையை ஒரு கட்டத்தில் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கைவிட்டன. இருப்பினும், சில தனிப்பட்ட நீதிபதிகளை அவர்கள் மீது குற்றச்சாட்டு எதுவும் இல்லாவிட்டாலும், வேறு சொல்லப்படாத காரணங்களுக்காக வேறு மாநில உயர் நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது!’’

இந்த ஊர்மாற்றம் மூலம் பணி மூப்பு ‘சீனியாரிட்டி’யில் (மாற்றம் - ஏற்றம் - இறக்கம்) செய்யப்பட்டு கொலிஜியமே மாறக் கூடியதாகி, நீதிபதிகள் நியமனப் பரிந்துரைகளில் நடுநிலை பிறழும் அபாயமும் உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியை 10 மாதங்களுக்குள் மாற்ற வேண்டிய அவசியமென்ன? உள்ளூர் மொழி தெரியாமல் கீழ்கோர்ட்டு மேல்முறையீடுகள் மொழிபெயர்ப்புத் தேவையால் நீதி - தீர்ப்புகள் தாமதிக்கப்படவும் வாய்ப்புண்டு.

நேர்மையான நீதிபதிகள் அதற்காக ‘தண்டிக்கப்பட; இந்த ஊர் மாற்றல் ஒரு தண்டனையாகவே அமைகிறதோ என்ற ஐயமும் பலருக்கும் ஏற்படுவது - நீதித்துறைக்குப் பெருமை சேர்ப்பதாகவே ஆகாது! இந்திய ஒருமைப்பாடு என்பதை இப்படி நிர்வாகக் கோளாறு - நீதித்துறை தாமதம் மூலமாகவா ஏற்படுத்துவது? கடந்த ஜனவரி மாதம்தான் மேற்கு வங்கத்திலிருந்து மாற்றப்பட்ட தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் சஞ்ஜிப் பானர்ஜி தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்திற்கு வந்தார். அவர் வழக்குகளைச் சிறந்த முறையில், ஓர்ந்து கண்ணோடாமல் தேர்ந்து நடுநிலை தவறாமல் நடத்தி வந்தார். அவரை ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், 10 மாதங்களுக்குள் திடீரென மாற்றி சிறிய மாநில உயர் நீதிமன்றமான மேகாலயாவிற்கு அனுப்ப பரிந்துரைப்பது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது!

குஜராத்திலிருந்து ஒருவர் இங்கே வரப் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார். சீராகவும், வேகமாகவும் நடைபெற்று வந்த இந்த நீதிபரிபாலனத்தில் இப்படி ஓர் அதிர்ச்சிக்குரிய மாற்றத்திற்கு என்ன காரணம் என்று வெளிப்படையாக எதுவும் தெரியாத நிலையில், சுமார் 237 வழக்குரைஞர்கள் அவரது மாற்றல் பரிந்துரையை ஏற்கக்கூடாது என்று கையொப்பமிட்டு மனு அனுப்பியுள்ளது மிகவும் சரியான ஜனநாயக உரிமைக் குரலேயாகும்!

மாண்பமை நீதிபதிகள் தங்களது தீர்ப்புரைகளில் அடிக்கடி ஒரு பழமொழியைப் பயன்படுத்துவார்கள் ‘‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்‘’ என்று. அதுதான் இப்போது நமக்கு நினைவிற்கு வருகிறது! அதுபோல, முன்பு மூத்த நீதிபதி சிவஞானம் - எவ்விதக் காரண காரியமுமின்றி கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டதும் நியாயமல்ல.

மக்களாட்சியில், மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம்தான் - அதன் சுதந்திர செயல்பாடும், ஆளுமையும்தான் மிகுந்த நம்பிக்கையைத் தருவன. பெகாசஸ் போன்ற வழக்கு தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றத்தின் ஆணை மக்கள் நம்பிக்கையை உயர்த்துவதாக அமைந்தது. ஆனால், இதுபோன்ற காரண காரியமின்றி வழங்கப்படும் மாறுதல் - மாற்றல்களால் அது மக்கள் நம்பிக்கையை குறைக்கவே செய்யும்.

இது ஒரு தனி நபர் பிரச்சினையல்ல; இது ஒரு கொள்கைப் பிரச்சினை. நியாயங்கள் காயங்களாகக் கூடாது. எனவே, உச்ச நீதிமன்றம் இந்த மாற்றல் பரிந்துரையை மறு ஆய்வு செய்து, ரத்து செய்யவேண்டும். குடியரசுத் தலைவரும் இத்தகைய பரிந்துரையை நடுநிலையோடு பார்த்து நிராகரிக்க வேண்டும்".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x