

கோவையில் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வினால் ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகரக் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதியருக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்தபோது மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்த மாணவிக்கு, அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாகவும், அதனால் மனமுடைந்தே மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது மகளிர் காவல்துறையினர் போக்சோ, மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவை உக்கடம் பகுதியில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லைகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள் என்று நமது முன்னோர் கூறியுள்ளனர். தாய், தந்தைக்குப் பிறகு மாணவர்களைக் காக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே இத்தகைய கீழ்த்தரமான செயலைச் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர்.
மாணவி தற்கொலை தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது போதுமானதல்ல. அவரின் பாலியல் குற்றங்களைத் தடுக்காமலும், உடந்தையாகவும் இருந்த பள்ளி நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.