

சேலம் அருகே ஏற்காடு மலைப் பாதையில் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்த ராட்சதப் பாறை, வெடி வைத்து அகற்றப்பட்டது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த சில நாட்களாகத் தொடர் மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக, மலைப் பாதையில் உள்ள 60 அடிப் பாலத்தின் அருகில், நேற்று மாலை 6.30 மணியளவில் ராட்சதப் பாறை ஒன்று உருண்டு விழுந்தது.
ஏற்காட்டில் இருந்து சேலம் வரும் வழியில், 60 அடிப் பாலத்தைத் தாண்டி 50 மீட்டர் தொலைவில் இந்தப் பாறை விழுந்தது. அந்த நேரத்தில் அவ்வழியாக வாகனங்கள் ஏதும் செல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்தப் பாறை ரோட்டின் ஒரு பகுதியில் விழுந்துள்ளது.
விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய அதிகாரிகளால், பாறையை அப்புறப்படுத்த முடியவில்லை. சுமார் 100 டன் எடையுள்ள அந்த ராட்சதப் பாறையை வெடி வைத்துத் தகர்த்துதான் அப்புறப்படுத்த முடியும் என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாறையை வெடிவைத்துத் தகர்த்தனர். தற்போது பாறையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
இதற்காக இரண்டு ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, இரவு பகலாக அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகள் இன்று மாலைக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதையடுத்து சாதாரணப் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மலைப்பாதையில் பாறை கிடக்கும் இடம் சமீபத்தில் சாலை அகலப்படுத்திய இடம் என்பதால் போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, வாகனங்களை அனுப்பி வைத்து வருகின்றனர். அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.