Published : 13 Nov 2021 12:15 PM
Last Updated : 13 Nov 2021 12:15 PM

புறநகர் ரயில் சேவையில் கரோனா பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

சென்னை புறநகர் ரயில்களில் கடைப்பிடிக்கப்பட்ட கரோனா பயணக் கட்டுப்பாடுகள் நவம்பர் 15 முதல் நீக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னை புறநகர் ரயில் சேவையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இது படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வந்தது. கடைசியாகப் பணியாளர்கள் அல்லாத ஆண் பயணிகளுக்கு மட்டும் நேரக் கட்டுப்பாடு மற்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோர் அதிகப்படியான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், தொற்று பரவும் அபாயம் குறைந்துள்ளது.

இதனிடையே, புறநகர் ரயில் சேவைக்கான கரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாக மக்கள் தொடர் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"கோவிட்-19 காரணமாக புறநகர் ரயில் சேவைகளில் விதிக்கப்பட்ட அனைத்துப் பயணக் கட்டுப்பாடுகளும் 15 நவம்பர் 2021 (திங்கட்கிழமை) முதல் நீக்கப்படுகின்றன. இதன் மூலம், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை - வேளச்சேரி ஆகிய பகுதிகளில் அனைத்துத் தரப்புப் பயணிகள் உட்பட பொதுமக்கள் நேரத் தடையின்றிப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

முன்பதிவு செய்யப்படாத தனிநபர், ரிட்டர்ன் பயண டிக்கெட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை அனைத்து வகைப் பயணிகளும் பெறலாம். இந்த டிக்கெட்டுகளை யு.டி.எஸ். மொபைல் ஆப் மூலமாகவும் பெறலாம்.

இருப்பினும், பயணிகள் முகக்கவசம் அணிதல், சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி போன்ற கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்''.

இவ்வாறு தெற்கு ரயில்வே நிர்வாக மக்கள் தொடர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x