

கரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இதுவரை 7 மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், 8-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம்நாளை (நவ.14) ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடை பெறுகிறது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்டபோது, “பொதுமக்கள் கேட்டுக் கொண்டதால் சனிக்கிழமை நடைபெற்று வந்த மெகா கரோனா தடுப்பூசிமுகாம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. 50 ஆயிரம் இடங்களில் நடைபெறும் மெகா முகாமில் 2-ம் தவணைக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதுதவிர மருத்துவர் தலைமையிலான குழுவினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்” என்றார்.
இன்று மெகா மருத்துவ முகாம்
இதற்கிடையே, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மழைக்காலத்தில் காய்ச்சல், சளி, சேற்றுப்புண், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளிலிருந்து மக்களைப் பாதுகாத்திட மிகப்பெரிய அளவில்மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமென்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி தமிழகம் முழுவதும்நாளை (இன்று) 5 ஆயிரம் இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.