

ஓர் அரசு நூலகம் என்றால் அதற்குள் என்னென்ன இருக்கும்? குறைந்தபட்சம் பெரிய அறை. நூல்கள் வைக்க பல அடுக்குகளில் அலமாரிகள். தினசரி, வார இதழ்கள் தாங்கிய நீண்ட மேஜை. அதைச்சுற்றிலும் வாசகர்கள் அமர்ந்து படிக்க நாற்காலிகள் என்று வரிசையாக சொல்லிக் கொண்டே செல்லலாம்.
ஆனால் கோவை, செம்மேடு கிராமத்தில் அமைந்துள்ள முழுநேர நூலகம் தண்ணீர்த் தொட்டிக்கு கீழே 6 அடிக்கு 6 அடி அளவுள்ள சிறிய அறைக்குள் அமைந்துள்ளது. அந்த அறைக்குள் மூன்று திக்குகளிலும் அடைத்திருக்கும் இரும்பு அலமாரிகளில் ஆயிரக்கணக்கான நூல்கள் ஒருபுறம் சிக்கித் தவிக்கின்றன. அதற்கு நடுவே ஒற்றைச் சேர், சிறிய மேஜையை கடைவிரித்து நூலகர் அமர்ந்திருக்கிறார்.
தண்ணீர்த் தொட்டி அறைக்கு வெளியே ஒடுங்கி துருப்பிடித்த இரும்பு நாற்காலி ஒன்று. அது மட்டும்தான் வாசகர் அமர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்த நூலகத்துக்கு ஆயிரக்கணக்கில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இங்கே எங்கே அமர்ந்து படிப்பது? எங்கே அமர்ந்து கையெழுத்துப் போட்டு நூல்களை பெற்றுச்செல்வது என்ற சிக்கலின் காரணமாகவோ என்னவோ தினந்தோறும் 15 அல்லது 20 வாசகர்கள் இங்கு வந்தாலே அதிகம் என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.
வாசகர்கள் சிலர் கூறியதாவது: கோரிக்கை வைத்ததன் அடிப்படையிலேயே இந்த கிளை நூலகம் 1997-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் வேறொரு கட்டிடத்தில் இயங்கிய நூலகம் சில காரணங்களுக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தண்ணீர்த் தொட்டிக்கு கீழ் உள்ள அறைக்கு மாற்றப்பட்டது. அப்போதிருந்து இப்போது வரை நூலகத்துக்கு இடம் கேட்டு எதுவும் நடக்கவில்லை.
நூலகத்திலிருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள தலித் மக்கள் வசிக்கும் காலனியில் உள்ள சமூகக்கூடத்தில் நூலகத்தை மாற்ற சிலர் முயற்சி எடுத்தனர். அதற்கு ஒத்துழைப்பு கிடைக்காததால், அந்த சமூகக்கூடத்தில் அரசு உத்தரவு பெற்று பகுதிநேர நூலகம் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிருந்து அலமாரிகள், ஆயிரக்கணக்கான நூல்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டதால் பெரிய அளவில் இருந்த இடைஞ்சல் கொஞ்சம் குறைந்திருக்கிறது. என்றாலும், 4 ஆண்டுகளுக்கு முன்பு பழைய கட்டிடத்தில் நூலகம் இயங்கியபோது நூலகத்துக்கு வாசகர்கள் வருகை நூற்றுக்கணக்கில் இருந்தது. அது இப்போது இல்லை.
இந்த சிறிய அறையின் முன்புறம் போட்டிருந்த மின்சார விளக்கை கூட உடைத்து விட்டார்கள். இச்சூழலில் நூலகத்தின் பெயர்ப் பலகை வைத்தால் கழற்றிச் சென்று விடுவார்கள் என அதைக்கூட வைப்பதில்லை.
தண்ணீர்த் தொட்டியிலிருந்து கசியும் நீர், சுவர்களை மட்டுமல்ல; புத்தகங்களையும் கூட சேதப்படுத்துகிறது என்றனர்.
இது குறித்து மாவட்ட நூலக அதிகாரி ஒருவர் கூறியதாவது: நூலகம் கட்ட இலவசமாக நிலம் அளிக்க வேண்டும். பஞ்சாயத்தில் பேசிப் பார்த்து விட்டோம். ஊர் முக்கியஸ்தர்களிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை முக்கிய விஷயமாக எடுத்து அமைச்சரே முயற்சித்தார். அதற்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே வரும் ஜூன் மாதத்துக்குப் பிறகு இதற்கு நிரந்தரத் தீர்வும், மாற்றமும் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.