

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் என்னை சந்தித்து சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக கடந்த 28-ம் தேதி நடைபெற்ற தமிழர் தேசிய முன்னணி செயற்குழு கூட்டத்தில் விவாதித்தோம். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக பங்கேற்பதில்லை என ஏற்கெனவே முடிவு செய்துள்ளோம்.
எனவே, யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை முடிவு செய்து அறிவிக்கும் அதிகாரத்தை தலைமை செயற்குழு எனக்கு அளித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்வோம். திமுக, அதிமுகவுக்கு ஆதரவளிக்க வாய்ப்பில்லை.
ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. ஆண்டுதோறும் தமிழர்கள் கச்சத் தீவுக்கு சென்று வருவதைத் தடுப்பதற்காக சீரமைப்பு என்ற பெயரில் அங்குள்ள அந்தோணியார் கோயிலை இடிக்க இலங்கை அரசு சதி செய்கிறது. இதை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
இவவாறு பழ.நெடுமாறன் கூறினார்.