

அரசு ஆலோசகர் ஷீலா பால கிருஷ்ணனை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர் உள் ளிட்ட உயர் பதவிகளில் இருக் கும்போது ஆட்சியாளர்களுக்கு துணை நின்ற அதிகாரிகளுக்கு பரிசாக ஆலோசகர் பதவியை தமிழக ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ஆலோசகர்கள் மக்களுக்கு நன்மை செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதை விட, சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் முறைகேடுகளை செய்வது எப்படி? என ஆலோசனை வழங்குவதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, அரசின் அதிகாரம் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலை யில், ஆலோசகருக்கு எந்த பணியும் இல்லை. எனவே, அப்பணியிலி ருந்து அவர் விடுவிக்கப்படுவது தான் சரியாக இருக்கும்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்ட ஆட்சியர்கள்தான் தேர் தல் அதிகாரிகள் ஆவர். அவர்கள் மீதே ஆளுங்கட்சியின் தூதர்களாக அரசு ஆலோசகர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், முதலமைச்சரின் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆதிக்கம் செலுத்தும் போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட மறுக்கிறது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பணி நீட்டிப்பில் உள்ள முதலமைச்சரின் செயலாளர் கே.என்.வெங்கட்ரமணன் ஆகிய இருவரையும் உடனடியாக பணி யிலிருந்து விடுவிக்க வேண்டும். தலைமைச் செயலாளர் ஞான தேசிகன், உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா ஆகியோரை தமிழக சட்டமன்றத் தேர்தலில் தலையிட முடியாத அளவுக்கு முக்கியத்துவமற்ற பணிகளுக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.