

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (80). இவர் மந்தைவெளி பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று காலை பணிமுடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். மந்தைவெளி பேருந்து நிலைய சிக்னல் அருகே சக்திவேல் நடந்து சென்றபோது, அங்கு தரையில் புதைக்கப்பட்டிருந்த மின் வயரில் ஏற்பட்டிருந்த மின் கசிவின் காரணமாக, சக்திவேல் மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.
இதில் பலத்தக் காயமடைந்த சக்திவேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பட்டினப்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.