

ஆறு மாதமாகியும் கரோனா தடுப்புப் பணிக்கான ஊக்கத்தொகை கிடைக்கவில்லை எனத் தமிழக அளவில் பணியாற்றிவரும் ஊர்க்காவல் படையினர் புலம்பி வருகின்றனர்.
தமிழக அளவில் சுமார் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதத்தில் 5 நாட்கள் வரை பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ரூ.550க்கு மேல் ஊக்கத்தொகை அல்லது வெகுமதி அளிக்கப்படுகிறது. காவல்துறை அதிகாரிகளின் ஒப்புதலுடன் திருவிழா, மாநாடு போன்ற காலங்களில் மட்டும் சற்று கூடுதலாகப் பணி வாய்ப்பு அளிக்கப்படும்.
இவர்களுக்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊர்க்காவல் படைக்கான வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை கனவு நிறைவேறாத, சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர்களே இப்படையில் பணியில் இருந்தாலும், அவர்களுக்கான சலுகை, ஊக்கத்தொகை உரிய நேரத்தில் கிடைக்கவில்லை எனப் புலம்புகின்றனர்.
மதுரை நகர், புறநகர்ப் பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கரோனா தடுப்பு நேரத்தில் பணியாற்றிய 700 பேருக்கு சுமார் 90 நாட்களுக்கான ஊக்கத்தொகை இதுவரை வழங்கவில்லை என, பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊர்க்காவல் படையினர் கூறுகையில், ''மதுரை நகரில் கரோனா தடுப்புக் காலத்தில் 350 பேரும், புறநகரில் சுமார் 400 பேரும் பணியில் ஈடுபட்டோம். நாள் ஒன்றுக்கு ரூ.560 ஊக்கத்தொகை வீதம் சுமார் 90 நாட்களுக்கு வழங்கவில்லை. பொறுப்பாளர்களிடம் கேட்டால், தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படையினருக்கு கரோனா தடுப்புப் பணிக்கான ஊக்கத்தொகை அளிக்கவில்லை என பதில் அளிக்கின்றனர்.
முன்களப் பணியாளர் என்ற அடிப்படையில் எங்களுக்கும் ரூ.5 ஆயிரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். எங்களுக்கான உபகரணங்களும் (கிட்) தாமதமாகவே வழங்கப்பட்டன. கடந்த 6 மாதமாக கரோனா ஊக்கத்தொகை வழங்குவதில் தாமதம் எனில் பிற மாதங்களில் பணிக்கான ஊக்கத்தொகையும் சில நேரத்தில் தாமதமாகக் கிடைக்கிறது. இதை முறைப்படுத்த வேண்டும்.
ஆண்டுக்கு இரு இலவச சீருடைகள் உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும். வெளியூர் பணிக்குச் செல்லும்போது, அதற்கான சாப்பாடு அலவன்ஸ் கிடைப்பதில்லை. எங்களுக்கான வாகனத்தைப் பயன்படுத்த முடியவில்லை. நாங்கள் சேவை நோக்கில் பணிக்கு வந்தாலும், எங்களுக்கென அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஊக்கத்தொகை, சலுகையை எதிர்பார்ப்பதில் தவறு இல்லை எனக் கருதுகிறோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.
ஊர்க்காவல் படைக்கான பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘கரோனா காலத்திற்கான ஊக்கத்தொகை, மதுரை மட்டுமின்றி தமிழக அளவில் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து நினைவூட்டல் கடிதம் எழுதுகிறோம். பிற நாட்களில் பணிபுரிவதற்கான ஊக்கத்தொகை கடந்த மாதம் வரை பாக்கி இல்லை. கரோனா காலத்திற்கான ஊக்கத்தொகையை வழங்க ஏடிஜிபி அளவிலான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முயற்சியும் நடக்கிறது’’ என்று தெரிவித்தார்.