

நாம் என்னவாக வரவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு பயணித்தால் வெற்றி நிச்சயம் என கல்லூரி மாணவர்களை திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் ஊக்கப்படுத்தினார்.
திண்டுக்கல் தனியார் கலைக் கல்லூரியில் பல்கலை மானியக்குழு பரிந்துரையின்படி முதலாமாண்டு மாணவர்களின் ஆற்றலைத் தூண்டக்கூடிய ஆறுநாள் திறன்மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
கல்லூரி தாளாளர் ரெத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது;
"உயர்ந்த நிலைக்கு வர சிரமப்படவேண்டும், விடாமுயற்சி வேண்டும். அப்போது தான் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேறமுடியும்.
உயர்க்கல்வி குறித்த தகவல்கள் எளிதில் தற்போது கிடைக்கிறது. இதனால் நாம் என்னவாக வரவேண்டும் என்று முதலில் தீர்மானித்துக்கொள்ளுங்கள். அந்த முடிவை நோக்கி பயணித்தால் வெற்றி நிச்சயமாகும்.
ஐந்து ஆண்டுகள் சிரமப்பட்டால் அடுத்த ஐம்பது ஆண்டுகள் சந்தோஷமாக இருக்கலாம். கல்வி பயிலும் ஐந்து ஆண்டுகள் நீங்கள் சந்தோஷமாக இருந்தால், அடுத்த ஐம்பது ஆண்டுகள் சிரமப்படவேண்டியதிருக்கும்.
எதுவும் முடியாத விஷயம் என்று இல்லை. முயற்சி இருந்தால் எந்த விஷயமும் வெற்றியை தரும். இருப்பதிலேயே எளிதானது சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவது தான். அரசியல்வாதியாகவோ, தொழில்அதிபராகவோ ஆக வேண்டுமானால் தான் மிகவும் சிரமப்பட வேண்டும்.
நாம் என்னவாக வேண்டும் என அடிவயிற்றில் ஒரு நெருப்பு உருவாகவேண்டும். அதை எரியவிட்டு நாம் உணர்வுடன் லட்சியத்தை நோக்கி பயணிக்கவேண்டும்.
முதலில் தோல்விகளாக முடிவது பின்னாளில் வெற்றிகளாக முடிந்துள்ளது. சிறிய யோசனைகள் தான் பெரிய வெற்றியை தரும். தொடர்ந்து முயற்சித்தால் வெற்றியை நிச்சயமாக அடையலாம்"
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.