

கனமழையால் பாதிப்புகள் அதிகம் என்பதால் தமிழகத்திற்கு தேவையான நிதி அளிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரையிலும் 2 லட்சம் ஏக்கர் பயிர் நாசம் ஏற்பட்டுள்ளதாகவும் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும்; பல கிராமங்களில் குடிசைகள் இடிந்து விழுந்துள்ளதாலும் தமிழகத்திற்கு தேவையான நிதி அளிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக குறுகிய நாட்களில் அதிகமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் இன்னமும் தண்ணீர் வடியவில்லை. இதனால் பல விதமான பாதிப்புகளுக்கு மக்கள் உள்ளாகியுள்ளனர்.
பெரும்பாலான மாவட்டங்களில் வயல்களில் பெரிய அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் பல லட்சக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் அழுகி மீளமுடியாத பாதிப்புக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி முளைத்துப் போய்விட்டன. ஏக்கருக்கு 20000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் திகைத்துப் போய் நிற்கின்றனர்.
நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்து போயுள்ளன. பல கிராங்களில் குடிசைகள் இடிந்து விழுந்து வாழ வழியின்றி மக்கள் உள்ளனர். நீர்நிலைகளை முறையாக தூர்வாரி பராமரிக்காததும், வடிகால் வாய்க்கல்கள் சரியாகப் பராமரிக்கப்படாததுமே இத்தகைய மோசமான நிலைக்குக் காரணமாகும்.
இத்தகைய நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளது மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கையாகும். பயிர் பாதிப்புக்குறித்து கணக்கெடுப்பு நடத்திட அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எனவே, வருங்காலத்தில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படாத வகையில், தொலைநோக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு நிரந்தமாக தீர்வு காண வழிவகை காண வேண்டும்.
தற்போது பெய்த மழையில், வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்டவர்கள், வீடுகள் இழந்து வாழ வழியின்றி இருப்பவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் முற்றிலும் அழிந்து போயுள்ளன. இது தவிர திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தோட்டக்கலைப் பயிர்களும் பல ஆயிரம் ஏக்கரில் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, முற்றிலும் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30000 இழப்பீடு வழங்க வேண்டும். இதர பயிர்களுக்கும், இறந்துபோன கால்நடைகளுக்கும் அதற்கேற்ப இழப்பீடு வழங்கிட தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.
தொடர்மழை, வருவாய்த்துறை அதிகாரிகள் வெள்ளநிவாரண பணிகளில் ஈடுபட்டது போன்ற காரணங்களால் பல விவசாயிகளால் பிரிமியம் கட்டமுடியாத நிலை உள்ளது. எனவே, பயிர்க்காப்பீட்டுக்கான பிரிமீயம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை கட்டாயம் நீட்டிக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி உதவியை செய்திட இந்திய ஒன்றிய அரசு முன்வரவேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு பெ.சண்முகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.