Last Updated : 12 Nov, 2021 01:14 PM

 

Published : 12 Nov 2021 01:14 PM
Last Updated : 12 Nov 2021 01:14 PM

தொடர் மழை: சேலம் அருகே வீடு இடிந்து சிறுவன் பலி; 4 பேர் படுகாயம்

சேலம் வீராணம் அருகே தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 5 வயதுச் சிறுவன் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி நந்தினி. கூலித் தொழிலாளியான ராமசாமி தனது தந்தை ஏழுமலை, தாய் காளியம்மாள், அக்கா மகள் புவனேஸ்வரி ஆகியோருடன் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அல்லிக்குட்டை பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக இன்று காலை ராமசாமி குடியிருந்த வீட்டின் ஒரு பகுதிச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த ராமசாமி, அவரின் குழந்தை, தாய், தந்தை, அக்கா மகள் என அனைவரும் இடிந்து விழுந்த சுவரின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

அப்போது அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது ராமசாமியின் ஒரே மகன் பாலசபரி ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டனர். உடனடியாகச் சிறுவனை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிறுவன் பாலசபரி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த ராமசாமி, ஏழுமலை, காளியம்மாள், புவனேஸ்வரி ஆகிய 4 பேரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் அறிந்த வீராணம் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களுக்குத் தேவையான இழப்பீடுகளை வழங்குவதாக உறுதியளித்தனர். ஆட்சியர் கார்மேகம் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார்.

உயிரிழந்த பாலசபரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தன் ஒரே மகன் உயிரிழந்த சம்பவத்தால் அவரது தாய் கதறி அழுத காட்சி, அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இதில் சிறுவனின் தாய் நந்தினி மட்டும் வீடு இடிந்த சம்பவத்தின்போது அருகில் உள்ள வீட்டிற்குச் சென்றிருந்ததால், அவர் சிறிதும் காயமின்றி உயிர் தப்பினார். காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x