Published : 12 Nov 2021 12:23 PM
Last Updated : 12 Nov 2021 12:23 PM

மழை பாதிப்பு; கூடுதலாக மருத்துவப் பரிசோதனை முகாம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கூடுதலாக 200 மருத்துவ முகாம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை உள்பட டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. குறிப்பாக சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காகப் பல இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனிடையே, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்துள்ள நிலையில், பருவமழை பாதிப்பை உடனடியாகக் கண்டறிந்து தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சென்னையில் தாழ்வான பகுதியில் இருந்த மக்கள் மாநகராட்சி சார்பில் முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் முறிந்து விழுந்த மரங்களை மாநகராட்சிப் பணியாளர்கள் உடனடியாக அகற்றிப் போக்குவரத்தைச் சரி செய்துள்ளனர். பல இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவப் பரிசோதனையைத் தீவிரப்படுத்தும் விதமாகத் தனியார் மருத்துவமனைகள் சார்பில் கூடுதலாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 200 மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை சென்னை தேனாம்பேட்டை ஆஸ்டின் நகரின் அமைக்கப்பட்டிருந்த முகாமில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x