Published : 12 Nov 2021 12:56 PM
Last Updated : 12 Nov 2021 12:56 PM

தொற்று நோய்கள் பரவாமல் இருக்க நோய்த் தடுப்பு முகாம்கள்: மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தொற்று நோய்கள் பரவாமல் இருக்க நோய்த் தடுப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் கடந்த 9-ம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று காலை தென்மேற்கு வங்கக் கடலில் நிலவியது. இது மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னைக்கு அருகே நேற்று மாலை 5.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்தில் கரையைக் கடந்தது. பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றது. அப்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரவு முழுவதும் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசியது.

தொடர் கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் நோய்த் தடுப்பு நடவடிக்கையில், சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறும்போது, “மழை காரணமாக காய்ச்சல், சளி, தோல் பாதிப்புகள் போன்றவை ஏற்படலாம். இதுபோன்ற தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க அந்ததந்தப் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளும் அரசோடு இணைந்து நோய்த் தடுப்பு முகாம்களை அமைக்கின்றன. அனைத்து மருந்துகளும் தேவையான எண்ணிக்கையில் உள்ளன.

டெங்கு மற்றும் மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெங்கு மற்றும் கோவிட்டைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன. மழை இல்லாமல் இருந்தால் திட்டமிட்டபடி நாளை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x