Published : 12 Nov 2021 12:07 PM
Last Updated : 12 Nov 2021 12:07 PM

கட்டுப்பாட்டுக்குள் கோவிட்; மலேசியா, சிங்கப்பூருக்குக் கூடுதல் விமானம்: வைகோ கோரிக்கை

கோவிட் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் மலேசியா, சிங்கப்பூருக்குக் கூடுதல் விமானம் இயக்கப்பட வேண்டுமென மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது, கோவிட் தொற்று ஓரளவிற்குக் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால், இந்தியப் பயணிகளுக்கு விதித்து இருந்த தடையைப் பல நாடுகள் விலக்கிக் கொண்டுவிட்டன.

இந்நிலையில் சென்னை, திருச்சியிலிருந்து மலேசியா, சிங்கப்பூருக்குக் கூடுதல் விமானம் இயக்கப்பட வேண்டுமென மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு இன்று (12.11.2021) எழுதியுள்ள மின்னஞ்சல் கடிதம் வாயிலாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து வைகோ தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது:

''கோவிட் தொற்று காரணமாக, பல நாடுகளில் இந்தியப் பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனவே, அந்த நாடுகளில் பணிபுரிகின்ற இந்தியத் தொழிலாளர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாடு திரும்பவும், மீண்டும் பணியில் சேர முடியாமலும் பரிதவித்து வந்தனர்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் குறைந்த அளவில் வான் ஊர்திகளை இயக்கியதால், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பயணிகள் சென்றுவர முடிந்தது.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் முழுமையான தடை இருந்தாலும், கோவிட் தொற்று குறைந்த அளவில் இருந்த வளைகுடா நாடுகளுக்கு, ஓரளவு வான் ஊர்திகள் பறந்தன. எனவே, தமிழ்நாட்டில் இருந்து மலேசியா, சிங்கப்பூருக்குச் செல்ல வேண்டிய பயணிகள், மேற்கு நோக்கி வளைகுடாவுக்குப் பறந்து, மீண்டும் இந்தியா வழியாக மலேசியா, சிங்கப்பூருக்குச் சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், இரண்டு அல்லது மூன்று மடங்கு கட்டணம் செலுத்தி வந்தனர்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், திருச்சியில் இருந்து மலேசியா, சிங்கப்பூருக்குக் குறைந்த அளவு வான் ஊர்திகள் சென்றன. ஆனால், சென்னையில் இருந்து வான் ஊர்திகள் இன்னமும் இயக்கப்படவில்லை.

தற்போது, கோவிட் தொற்று ஓரளவிற்குக் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால், இந்தியப் பயணிகளுக்கு விதித்து இருந்த தடையைப் பல நாடுகள் விலக்கிக் கொண்டுவிட்டன. கடந்த நவம்பர் 7 முதல் அமெரிக்காவுக்கு இந்தியப் பயணிகள் செல்கின்றனர். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில், இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை, நவம்பர் 15 முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக அந்நாடுகள் அறிவித்து இருக்கின்றன.

தமிழ்நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள், மலேசியா, சிங்கப்பூருக்குச் செல்லக் காத்திருப்பதால், சென்னை, திருச்சியில் இருந்து கூடுதல் வான் ஊர்திகளை இயக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்''.

இவ்வாறு வைகோ தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x