Published : 12 Nov 2021 11:29 AM
Last Updated : 12 Nov 2021 11:29 AM

மழை நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துக; பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி வழங்குக: ராமதாஸ்

மழை நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையிலும், காவிரி பாசன மாவட்டங்களிலும் வடகிழக்குப் பருவமழை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்த சூழலில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், எத்தகைய பேரழிவை ஏற்படுத்துமோ என அனைவரும் அஞ்சிக் கொண்டிருந்த நிலையில், பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் கரையைக் கடந்து சென்றுள்ளது. மக்களுக்கு மட்டுமின்றி அரசுக்கும் இது நிம்மதியை அளித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டு மக்களிடம் மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கியிருந்தது. பேருந்து, புறநகர் தொடர்வண்டி சேவை, மெட்ரோ தொடர்வண்டி சேவை உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது ஆகியவற்றில் தொடங்கி விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது வரை ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் 55 கி.மீ வரை இருந்ததாகக் கூறப்பட்டாலும் கூட அதிக பாதிப்புகள் ஏற்படவில்லை; அதிக மழையும் பெய்யவில்லை. அதனால் தமிழகம் தப்பித்துவிட்டது.

அதேநேரத்தில் சென்னையும், தமிழகத்தின் பிற மாவட்டங்களும் மழையின் பாதிப்புகளில் இருந்து இன்னும் மீண்டுவிடவில்லை. சென்னையில் சனிக்கிழமை தொடங்கிய மழையால் ஏற்பட்ட வெள்ளம் இன்னும் பல பகுதிகளில் வடியவில்லை. காவிரி பாசன மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் பெய்த மழையால் பல லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பல வகையான பயிர்கள் சேதமடைந்து விட்டன.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை - வெள்ளம் காரணமாக ஆறுகளில் கட்டப்பட்டிருந்த அணைகள், தடுப்பணைகள் பல இடங்களில் உடைந்து விட்டன. பல்லாயிரம் கி.மீ தொலைவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. இவை அனைத்தையும் அரசு விரைந்து சீரமைக்க வேண்டும். குறிப்பாக சென்னை மாநகரின் சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சென்னை மாநகரின் பல பகுதிகள் 2015-ஆம் ஆண்டில் சந்தித்ததை விட மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. வட சென்னை, தென்சென்னை என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் மழை - வெள்ள நீர் தேங்கிக் கிடக்கிறது. வசிப்பதற்கு மிகவும் பாதுகாப்பான இடங்கள் என்று கூறப்பட்ட பகுதிகளில் கூட மக்களால் வீடுகளை விட்டு வெளியில் வர முடியவில்லை. குடிநீர், பால், காய்கறிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை.

தொடர்ந்து ஆறு நாட்கள் நீர்ச்சிறையில் அடைபட்டு கிடப்பது உளவியல்ரீதியாகவும் கொடுமையானது. சென்னையின் பல பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் மழை நீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றுவதன் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு மாநகராட்சியும், தமிழக அரசும் நீர்ச்சிறையிலிருந்து விடுதலை தர வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டும் சம்பா பருவத்தில் காலம் தவறி பெய்த மழையால் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்து உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. நடப்பு சம்பா பருவம் வெற்றிகரமாக அமைந்தால் தான் அவர்களால் இழப்பை ஈடு செய்ய முடியும். ஆனால், நடப்பு சம்பா பருவத்திலும் கனமழையால் அவர்களுக்கு இழப்பு தான் ஏற்பட்டிருக்கிறது.

அதை தமிழக அரசும் உணர்ந்து பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் குழுவை காவிரி டெல்டாவுக்கு அரசு அனுப்பி வைத்திருக்கிறது. அமைச்சர்கள் குழுவினர் ஆய்வை விரைவாக முடித்து பாதிக்கப்பட்ட உழவர்கள் அனைவருக்கும் போதிய இழப்பீடு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

சென்னையிலும், பிற பகுதிகளிலும் தொடர்ந்து பெய்த மழை பெரும்பான்மையான குடும்பங்களுக்கு வாழ்வாதார இழப்புகளையும், உடமை இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறைந்தது ரூ.5,000 நிதியுதவி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x