

வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னை அருகே நேற்று மாலை கரையைக் கடந்தது. இதன் காரணமாக பெய்த இடைவிடாத மழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. மாநகருக்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் விளக்கிக் கொண்டதால் பொதுக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
வங்கக் கடலில் கடந்த 9-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று காலை தென்மேற்கு வங்கக் கடலில் நிலவியது. இது மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னைக்கு அருகே நேற்று மாலை 5.30 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்தில் கரையை கடந்தது. பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றது. அப்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரவு முழுவதும் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசியது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்தது. இதன் தாக்கத்தால் 12, 13-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப் படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னைக்கு விடப்பட்டிருந்த அதிகன மழைக்கான ‘ரெட் அலர்ட்’ விலக்கிக் கொள்ளப்பட்டது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம், புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 11-ம் தேதி வரை வழக்கமாக 26 செ.மீ. மழை கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு 40 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 54 சதவீதம் அதிகம். சென்னையில் இந்த காலகட்டத்தில் வழக்கமாக 42 செ.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு 74 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 77 சதவீதம் அதிகமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 23 இடங்களில் மிக கனமழையும், 21 இடங்களில் கனமழையும் பெய்தது. அதிகபட்சமாக தாம்பரத்தில் 23 செ.மீ., சோழவரத்தில் 22 செ.மீ., எண்ணூரில் 21, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் தலா 18 செ.மீ., டிஜிபி அலுவலகம், நுங்கம்பாக்கம், பெரம்பூர் ஆகிய இடங்களில் தலா 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் மாநகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தெருக்களில் வெள்ளம் ஆறாக ஓடியது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்தனர். ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை, தி.நகர் அரங்கநாதன் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, வியாசர்பாடி பகுதியில் உள்ள 2 சுரங்கப்பாதைகள், பல்லாவரம், தாம்பரத்தில் உள்ள சுரங்கப்பாதைகள் எல்லாம் மழை நீரில் மூழ்கின. அதனால் அதன் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.
கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, மயிலாப்பூர் டாக்டர் சிவசாமி சாலை, பெரவள்ளூர் 70 அடி சாலை, வியாசர்பாடி முல்லைநகர் பாலம் உள்ளிட்ட 9 சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சில சாலைகளில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதைகள், சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சென்னையில் 45 இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் சாய்ந்தன. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
முதல்வரின் தொகுதியான கொளத்தூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, எண்ணூர் மீனவ பகுதிகள், மயிலாப்பூர், அரும்பாக்கம், கே.கே.நகர், கோயம்பேடு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 523 இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. அதில் 46 இடங்களில் மட்டுமே நீர் வடிந்துள்ளன. மற்ற பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அப்பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட 2,250 பேர், 44 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.
முதல்வர் உத்தரவு
இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, நிவாரண நடவடிக்கைகளை கண்காணித்து, பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர்கள், மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டார்.
மேலும், பயிர் சேதங்களைத் தவிர்க்கும் வகையில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று துறை அலுவலர்களை முதல்வர் கேட்டுக் கொண்டார். முன்னதாக, தலைமைச் செயலகத்தில் மாநிலத்தின் மழை, வெள்ள நிலை குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய்த் துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
கனழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.12) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.