Published : 12 Nov 2021 03:15 AM
Last Updated : 12 Nov 2021 03:15 AM

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை: வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் இதுவரை 14 பேர்உயிரிழந்துள்ளதாகவும், அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

தமிழகத்தில் கனமழை நிவாரணப் பணிகள் தொடர்பாக, மாநிலஅவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ராமச்சந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38 மாவட்டங்களிலும் சராசரியாக 2 செ.மீ. மழையும், அதிகபட்சமாக செங்கல்பட்டில் 13 செ.மீ. மழையும் பெய்துள்ளது. மழை, வெள்ள பாதிப்பும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இயல்பு அளவாக இருந்த 26 செ.மீ.விட, 56 சதவீதம் அதிகமாக அதாவது 40.50 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பலத்த மழையுடன், காற்றும் வீசி வருகிறது. எனவே, பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக, வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள் வெளியில் செல்ல வேண்டாம்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் அளவுக்கு, பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழையின் அளவைப் பொறுத்து, நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். காற்று அதிகம் வீசும் நிலையில், மரங்கள் விழுந்தால், அவற்றை அகற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 13 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. எனினும், போக்குவரத்துக்கு சிக்கல் இல்லாத சூழலைஉருவாக்கியுள்ளோம். தண்ணீர் தேங்கும் இடங்களில், மோட்டார்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிக்கு 11,290 புகார்கள் வந்துள்ளன. அவற்றில்5,395 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில கட்டுப்பாட்டு அறைக்கு 1,800 புகார்கள் வந்ததில், 1,044 புகார்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. நவம்பர் 10-ம் தேதி மட்டும் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருவர்இறந்துள்ளனர். 157 கால்நடைகள் இறந்துள்ளன. 1,146 குடிசைகள், 237 வீடுகள் சேதமடைந்துள்ளன. தேவையான நஷ்டஈடு வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகளை செய்துள்ளோம்.

வடகிழக்குப் பருவமழையால் இதுவரை 14 பேர் இறந்துள்ளனர். அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை விட்டதும், பயிர் கணக்கீடு உள்ளிட்ட பணிகளைத் தொடங்கிவிடுவோம்.

பேரிடர் மீட்புப் படை

காஞ்சிபுரம் வரதராஜபுரம் பகுதியில் மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது.

மொத்தமாக 11 தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் 4 மாநில பேரிடர் மீட்புப் படை என 15 குழுவினர் பணியில் உள்ளனர்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 185 நிவாரண முகாம்களில் 10,073 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 44 முகாம்களில் 2,249 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 26.50 லட்சம்உணவுப் பொட்டலங்கள் வழங்கப் பட்டுள்ளன. சென்னையில் 200 வார்டுகளிலும் உணவு வழங்குவதற்காக 200 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் 523 பகுதிகளில் நீர் தேங்கியிருந்த நிலையில், 46 இடங்களில் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 477 இடங்களில் நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், காற்றால் விழுந்த 230 மரங்களை அப்புறப்படுத்தியுள்ளோம். மழைகுறைந்தால் அனைத்துப் பணிகளும், விரைவாக நடைபெறும்.

தற்போதைய மழை அனுபவத்தைக் கொண்டு, வரும் நவ. 13-ம்தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியை எதிர்கொள்வோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x