தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் எப்போது நடத்தப்படும்?- மாநில தேர்தல் ஆணையம் இன்று பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் எப்போது நடத்தப்படும்?- மாநில தேர்தல் ஆணையம் இன்று பதிலளிக்க உத்தரவு

Published on

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் எப்போது நடத்தி முடிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் இன்று விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து, தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் பல இடங்களில் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட தயாளன் என்பவர், ஆளுங்கட்சி ஆதரவுடன் வார்டு உறுப்பினர்களை வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தியதாகவும், எனவே அந்த தேர்தல்தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் கண்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதில், மறைமுகத் தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும், சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது.

அப்போது, 9 மாவட்டங்களிலும் பல இடங்களில் மறைமுகத் தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை என்றுமாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, "மறைமுகத் தேர்தலை விரைவாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். இந்த மறைமுகத் தேர்தல் எப்போது நடத்தி முடிக்கப்படும் என்று நவ. 12-ம் தேதி (இன்று) விளக்கம் அளிக்க வேண்டும்" என்றுமாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், தேவையில்லாத அழுத்தத்துக்கு அவர்கள் ஆளாகாத வகையில்பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும், போலீஸாருக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.`

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in