

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாலாறில் மணல் திருட்டை தடுக்க நீர்வள ஆதாரத் துறையினர் 'ட்ரோன்' கேமரா மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் இருக்கும் நந்தி மலையில் உருவாகி, கர்நாடகாவில் 93 கி.மீ., ஆந்திராவில், 23 கி.மீ.தூரம் பயணம் செய்கிறது பாலாறு. ௮தன்பின் வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியாக தமிழக எல்லைக்குள் 222 கி.மீ. பயணம் செய்து, செங்கல்பட்டு மாவட்டம் வாயலூர் முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பாலாறில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு குடிநீரும் கொண்டு செல்லப்படுகிறது. அதே போல வாயலூர் மற்றும் ஆயப்பாக்கம் கிராமங்களில் இருந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
பாலாறு, மணல் திருட்டு மற்றும் ஆக்கிரமிப்புகளால் பாழாக்கப்பட்டுள்ளது. மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டாலும் தொடர்ந்து மணல் திருடப்பட்டு வருகிறது. இவற்றைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், காவல் துறை, அரசியல் கட்சியினர், வருவாய்த் துறை ஆகியோர் உதவியுடன் தொடர்ந்து மணல் திருடப்பட்டு வருகிறது. மணல் திருட்டைத் தடுக்க நீர்வள ஆதாரத் துறையினர் பல்வேறு வகையில் நடவடிக்கை எடுத்தாலும், ௮த்துறையில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து செல்ல முடியாத சூழலால், மணல் திருட்டு தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்நிலையில், மணல் திருட்டை நிரந்தரமாக தடுக்க நீர்வள ஆதாரத் துறையினர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பாலாறு பகுதிகள் முழுவதுமாக, 'ட்ரோன்' கேமரா மூலம் இரவு - பகல் பாராமல் கடந்த சில நாட்களாக கண்காணிக்கத் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு நீர்வள ஆதாரத் துறையின் உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ் கூறியதாவது: மணல் திருடப்படுவதைத் தடுப்பதற்காக தற்போது நீர்வள ஆதாரத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பகுதியில் இருக்கும் பாலாறில், 'ட்ரோன்' கேமரா மூலம் கண்காணிக்கும் பணி கடந்த சில நாட்களாக தொடங்கப்பட்டுள்ளது. மணல் திருட்டு சம்பவங்கள் நடந்தால் புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட காவல் துறை மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் அனுப்பப்படும். இந்த நடவடிக்கையால் மணல் திருட்டை முழுமையாகத் தடுக்க முடியும் என நம்புகிறோம் என்றார்.