

உடுமலையில் சங்கர் படுகொலை சம்பவத்தில், கவுசல்யாவின் தந்தை, கல்லூரி மாணவரை காவ லில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக் காலம் முடிந்ததால், இருவரையும் மீண்டும் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை யில் கலப்புத் திருமணம் செய்த காரணத்துக்காக கடந்த 13-ம் தேதி சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இவரது மனைவி கவுசல்யா பலத்த காயமடைந்தார். இவ்வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, கல்லூரி மாணவர் ஆகியோர் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரண டைந்தனர்.
இவர்கள் இருவரையும் வழக்கு தொடர்பாக விசாரிக்க அனுமதி கேட்டு போலீஸார் மாஜிஸ்தி ரேட்டிடம் விண்ணப்பித்தனர்.
அதன் அடிப்படையில் சின்னச் சாமியை கடந்த 21-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையும், கல்லூரி மாணவரை 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையும், போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அனுமதிக்காலம் முடிவடைந்த தால், இருவரையும் போலீஸார் உடுமலை மாஜிஸ்திரேட் முன்னி லையில் நேற்று ஆஜர்படுத்தினர். சின்னச்சாமியை கோவை மத்திய சிறையிலும், மாணவரை பொள் ளாச்சி சிறார் சிறையிலும் அடைக்க அவர் உத்தரவிட்டார்.
வீடு திரும்பினார் கவுசல்யா
சங்கர் கொலை செய்யப்பட்ட போது பலத்த காயமடைந்த கவு சல்யா கோவை அரசு மருத்துவ மனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது தலையில் ஏற்பட்ட காயத்துக்கு 36 தையல்கள் போடப்பட்டன. சிகிச்சை முடிந்த நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் ஏ.எட்வின்ஜோ கூறும்போது, "கவுசல்யாவுக்கு சிகிச்சை முடிந்த நிலையில், மருத்துவமனைக்கு வந்த உடு மலை போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தோம்" என்றார்.
டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது, சங்கரின் தந்தை மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது, சங்கரின் வீட்டுக்குச் செல்ல விரும்புவதாக கவுசல்யா தெரிவித்ததை அடுத்து, போலீஸார் சங்கரின் தந்தை வேலுச்சாமியுடன் அனுப்பி வைத் தனர்.