Published : 19 Mar 2016 08:37 AM
Last Updated : 19 Mar 2016 08:37 AM

தமிழக அரசியலில் நெருங்கும் ஆபத்து: வைகோ அச்சம்

கோவை மாவட்ட மதிமுக அலுவலகத்தில் தேர்தல் நிதியளிப்பு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு வந்திருந்த வைகோ, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுகவில் பெரிய பூகம்பமே நடந்து கொண்டிருக்கிறது. எதற்காக அங்கே 3 மாதத்துக்கு ஒரு அமைச்சரை மாற்றினார்கள். முன்னிலையில் இருந்த ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஐவரணியில் இருக்கிறார்களா? இது உட்கட்சி விவகாரம் என்று தப்பித்துக்கொள்ள முடியாது.

ஊழலில் சம்பாதித்த ஆயிரக் கணக்கான கோடிகள் கேரளத்தில் பிடிபட்டதாகவும், அதை போலீஸார் இங்குள்ள அதிகாரிகளிடம் ஒப் படைத்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 2 அமைச்சர்களின் வீடுகளில் நடந்த சோதனையில் பல்லாயிரக்கணக்கான கோடிகள் கைப்பற்றப்பட்டு தலைமைக்கு கொண்டுபோனதாக தகவல்கள் வருகின்றன. இதுபோன்ற முறைகேடு, ஊழல் நாட்டில் எந்த இடத்திலும் நடந்ததில்லை என்று பொருளாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், பெங்களூரு நீதிமன்ற வழக்கு விசாரணை வேகம் எடுத்துள்ளது. குன்ஹாவின் தீர்ப்பு உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. எனவே, தமிழக அரசியலில் நினைத்துப் பார்க்கவே முடியாத ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நியாயப்படுத்துவது மாதிரி சாதிக்பாட்சா விவகாரம் தற்போது வெளிவந்திருக்கிறது. குடும்பத்தில் யார் மீது குற்றச்சாட்டு வந்தாலும், எனக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று ஸ்டாலின் தப்பித்துக்கொள்ள முடியாது. ஆக, இவர்கள் இரண்டு பேருமே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி விட்டார்கள். ஊழலில் இருந்து தமிழகத்தை மீட்க இவர்களிடம் சிலுவைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

செல்போன் சிங்கங்கள்

எங்களுக்கு ஆதரவு எல்லாம் செல்போன் சிங்கங்கள்தான். கட்சியே இல்லாத இளைஞர் கூட்டம் வாட்ஸ் அப் உள்ளிட்ட தகவல்கள் மூலம் ஊழலை தோலுரிக்கிறார்கள். தேர்தலுக்கு 60 நாள் உள்ளது. விஜயகாந்துக்காக எங்கள் கூட்டணி காத்திருப்பதில் தவறில்லை. மதுவிலக்கு விஷயத்தில் கருணாநிதி வெளியிட்டிருக்கும் அறிக்கை அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே நாடகமாடுவதை உறுதிப்படுத்துகிறது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x