

இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி பயணித்தால் சாதிக்கலாம் என உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பேசினார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேஷன் சார்பில் புதிய நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார் ஆகியோருக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது. பார் அசோசியேஷன் தலைவர் என்.கிருஷ்ணவேனி வரவேற்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீராகதிரவன், ஆர்.பாஸ்கரன், மூத்த வழக்கறிஞர் ஐசக்மோகன்லால், வழக்கறிஞர் எஸ்.சீனிவாசராகவன் ஆகியோர் புதிய நீதிபதிகளை நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பேசுகையில், நான் மண்ணின் மகள். மதுரைக்கு என்னால் முடிந்ததை செய்வேன். மண்ணின் பெருமையை கண்டிப்பாக காப்பாற்றுவேன். உங்களுடன் வழக்கறிஞராக இருந்து தான் நீதிபதியாகியுள்ளேன். என்னுடன் பழகியவர்கள் அனைவரும் என்னை ஊக்கப்படுத்தினர். அந்த தூண்டுதலால் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைத்து பணிபுரிந்தேன்.
என் குரு நீதிபதி எஸ்.வைத்தியநாதன். ஒவ்வொரு விஷயத்திலும் என்னை அவர் ஊக்குவித்தார். நீதிமன்றத்தில் வாதிடும் போது, இப்படி செய்தால் சிறப்பாக இருக்குமே என்பார். ஒரு இலக்கு நிர்ணயித்து அதை நோக்கி பயணப்பட்டால் கண்டிப்பாக சாதிக்க முடியும். அவ்வாறு செயல்பட்டால் உயர் நீதிமன்ற மதுரை கிளையிலிருந்து பெண் வழக்கறிஞர்கள் அதிகளவில் நீதிபதிகளாக வருவதற்கு வாய்ப்புள்ளது என்றார்.
நீதிபதி விஜயகுமார் பேசுகையில், கரோனாவால் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அனைவரும் சந்திக்கிறோம். நீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்கியது போல் உள்ளது. கிரிக்கெட்டில் மூத்த பேட்ஸ்மேன் வாய்ப்பு அளித்தால் மட்டுமே இளைய பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதே போல் நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளிலேயே தீர்ப்பு எழுதும் வாய்ப்பை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் எனக்கு வழங்கினார். வழக்கறிஞர்களுடன் இருந்து நீதிபதியாக வந்துள்ளேன். இதனால் எப்போதும் வழக்கறிஞர்களுக்கு துணை நிற்பேன் என்றார்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். பார் அசோசியேஷன் பொதுச் செயலர் என்.இளங்கோ நன்றி கூறினார்.