Published : 11 Nov 2021 04:50 PM
Last Updated : 11 Nov 2021 04:50 PM

பயீர்க் காப்பீடு; மழைக்கால சிரமத்தைப் புரிந்து அவகாசம் வழங்குக: ஜி.கே.வாசன் கோரிக்கை

கோப்புப்படம்

சென்னை

மழைக்கால சிரமங்களைக் கவனத்தில் கொண்டு பயிர்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனத் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழக அரசு – விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதி கடைசித் தேதி என்பதை மழைக்கால சிரமத்தைக் கவனத்தில் கொண்டு நவம்பர் 30ஆம் தேதி வரை பயிர்க் காப்பீடு செய்யக் கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலத்தை நீட்டிக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். இப்பருவத்திற்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் ராபி பருவ வேளாண் பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் நவம்பர் 15ஆம் தேதி.

அதாவது நவம்பர் 15ஆம் தேதிக்குள் பாசிப் பயிறு, உளுந்து பயிர் மற்றும் சம்பா நெற்பயிர்களுக்குக் காப்பீடு செய்தால் விவசாயிகளுக்குப் பயன் கிடைக்கும்.

தற்போது பெய்து வரும் பருவமழை, கனமழை ஆகியவற்றால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் அதிக நஷ்டத்தில் இருக்கின்ற காரணத்தால் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மழை பெய்யும் இவ்வேளையில் விவசாயிகள் பயிர்க் காப்பீடு சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்து அடங்கல் வாங்குவதும் சிரமமானது.

இந்நிலையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்யாத விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை 2021 நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு வேளாண்துறை அறிவித்தது. தற்போதைய சூழலில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்குச் சாதகமானதாக இருக்காது.

தமிழகத்தில் கனமழை பெய்யும் இக்காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும். எனவே தமிழக அரசு, விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதி கடைசித் தேதி என்பதை மழைக்கால சிரமத்தைக் கவனத்தில் கொண்டு நவம்பர் 30ஆம் தேதி வரை பயிர்க் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும்"

இவ்வாறு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x