Last Updated : 11 Nov, 2021 04:25 PM

 

Published : 11 Nov 2021 04:25 PM
Last Updated : 11 Nov 2021 04:25 PM

புதுச்சேரியில் கடல் சீற்றம்; உயரும் அலைகளால் பொதுமக்களுக்குத் தடை: ஒலிபெருக்கி மூலம் மக்களை எச்சரித்த போலீஸார்

கடல் சீற்றம் அதிகரித்த நிலையில் புதுவைக் கடற்கரையில் ஒலிபெருக்கி மூலம் மக்களை எச்சரித்த போலீஸார்.

புதுச்சேரி

காற்றழுத்தத் தாழ்வு நிலையால் புதுச்சேரியில் கடல் சீற்றமடைந்து தரைக்காற்றுடன் அலைகள் உயர்ந்து வருகின்றன. இதனால் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு ஒலிபெருக்கியில் மக்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

புதுச்சேரியில் கடந்த 5 நாட்களாக கனமழை பொழிவு இருந்தது. நேற்று மாலை முதல் பெய்த கனமழை இரவு முதல் தீவிரம் குறைந்தது. மழை தணிந்து சாரலாக உள்ளதால் பல இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ளது. இன்று காலை 8.30 வரை கடந்த 24 மணி நேரத்தில் 34 மி.மீ. மழை பதிவானது.

அதே நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் புதுச்சேரி கடற்கரையில் அலையின் சீற்றம் அதிக அளவில் இருந்தது. அத்துடன் மூன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தரைக்காற்றும் வீசத் தொடங்கியது. மீனவர்கள் யாரும் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை.

அதிக உயரத்துக்கு அலைகள் பல இடங்களில் எழத் தொடங்கின. கடற்கரை சீற்றம் அதிக அளவில் இருப்பதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பார்க்க வந்தனர். பலரும் வேடிக்கை பார்க்கவும், அலையில் காலை நனைக்கவும் வந்தனர். இதையடுத்து போலீஸார் கடற்கரைச் சாலையில் பார்வையாளர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அனுமதிப்பதைத் தவிர்த்தனர்.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில் புதுவைக் கடற்கரையில் கடல் சீற்றம்.

புதுச்சேரி கடற்கரை பகுதியில் புதிதாக உருவாகியுள்ள கடற்பரப்பில் இருந்த சுற்றுலாப் பயணிகளுக்குக் கடலில் இறங்கத் தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து அவர்களை அங்கிருந்து செல்ல அறிவுறுத்தினர்.

அதேபோல் ஈடன் கடற்கரை, பாரடைஸ் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு கடற்கரை பகுதிகளால் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுளது.

மீனவ கிராமங்களான வம்பா கீரப்பாளையம், வீராம்பட்டினம், தவளகுப்பம், நல்லவாடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 1000க்கும் மேலான படகுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தாழ்வு மண்டலம் கரையை நெருங்க நெருங்க காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும், தரைக்காற்றும் வேகமாக வீசும் என்பதால் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x