

சம்பா பயிர்களைக் காப்பீடு செய்ய டிசம்பர் 15-ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் எனக் காவிரி உரிமை மீட்புக் குழு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்குழுவைச் சேர்ந்த நா.வைகறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சுமார் 1.20 லட்சம் ஏக்கர் சம்பா தாளடி நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
வாய்க்கால் மற்றும் ஏரிகள் முழுமையாகத் தூர்வாரப்படாத காரணத்தால் நீரோட்டம் தடைப்பட்டு மழைநீர் வயலுக்குள் இறங்கி பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ள 50 விழுக்காடு நெற்கதிர்கள் சாய்ந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பா நடவுக்கான 1500 ஏக்கர் நாற்றங்காலில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு வேளாண் துறை சம்பா பருவப் பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாள் என்று அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடைசி நாள் டிசம்பர் 15 என்று அறிவித்துள்ளது.
கடந்த ஆட்சியில் பயிர்க் காப்பீடு செய்யக் கடைசி நாள் டிசம்பர் 18 வரை அவகாசம் தரப்பட்டது. கனமழை காரணமாக அனைத்து உழவர்களும் சம்பா பருவப் பயிர்களைக் காப்பீடு செய்ய டிசம்பர் 15 வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தண்ணீர் தேங்கியுள்ள நாற்றங்காலுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நட்ட ஈடாக ரூபாய் 15,000 வழங்க வேண்டும். அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ள பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 30 ஆயிரம் நட்ட ஈடாக வழங்க வேண்டும். கடந்த ஆண்டு சம்பா பயிருக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள காப்பீட்டுத் தொகையும் உடன் வழங்க வேண்டும்.
கிராம நிர்வாக அதிகாரிகள் உழவர்களுக்கு சிட்டா அடங்கல் உடனடியாக வழங்கி காப்பீடு பெறுவதற்கு உதவ வேண்டும். ஆன்லைன் வழியாக உழவர்களுக்குக் காப்பீடு செய்ய ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க சிறப்பு ஏற்பாடு செய்து காப்பீட்டை முழுமையாகப் பதிவு செய்திட வேண்டும்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களின் மூலமாகக் காப்பீடு பதிவு செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு வைகறை வலியுறுத்தியுள்ளார்.