

சென்னையில் நேற்று மாலை முதல் பெய்துவரும் கனமழை மற்றும் காற்று காரணமாக சென்னைக்கு விமானங்கள் வருகை மாலை வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, தீவிர காற்றழுத்தழத்தத் தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி நகர்ந்து வருகிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் சென்னையில் நேற்று மாலை முதல் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னை வானிலை மையம் சில மணிநேரத்துக்கு முன் வெளியிட்ட அறிவிப்பின்படி சென்னைக்குத் தென்கிழக்கில் 130 கி.மீ. தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மாலை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று மாலை முதல் பெய்துவரும் மிக கனமழையால், சென்னையில் பல சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடுகிறது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை துண்டிக்கப்பட்ட மின்சாரம் இன்னும் வராததால் மக்கள் பெரிய சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இன்று மாலை வரை கனமழை நீடிக்கும், மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து விமான வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், சென்னையிலிருந்து விமானங்கள் புறப்படுவதில் எந்தத் தடையும் இல்லை.
இதுகுறித்து சென்னை விமான நிலையம் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், “ தீவிரமான மழை மற்றும் காற்று காரணமாக, சென்னை விமான நிலையத்துக்கு வரும் விமானங்கள் பிற்பகல் 1.15 மணி முதல் மாலை 6 மணிவரை ரத்து செய்யப்படுகின்றன. அதே நேரம், விமானப் புறப்படுவது வழக்கம் போல் இருக்கும். பயணிகளின் நலன் கருதி, தீவிரக் காற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தீவிரமான மழை, வானிலை காரணமாகப் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.